ராசிபுரம், ஆக. 12: சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.
ஆனால், இப்போதும் கழிப்பிட வசதியே இல்லாமல் ஒரு கிராமம் இருப்பது என்பது உள்ளாட்சி நிர்வாகத்துக்கே தலைகுனிவை ஏற்படுத்தும்.
இதனால், சூரிய உதயத்திற்கு முன்பே மக்கள், குறிப்பாகப் பெண்கள் இயற்கை உபாதைகளைக் கழிக்க மறைவிடங்களை தேடிச் செல்லும் நிலை தொடர்வது வேதனையளிக்கக்கூடியது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள கூனவேலம்பட்டிப்புதூர் ஊராட்சிப் பகுதிக்கு உட்பட்டது கரையாண்தின்னிப்புதூர் கிராமம். பனைத்தொழிலாளர்கள், விவசாயக் கூலித்தொழிலாளர்கள் நிறைந்த இக் குடியிருப்புப் பகுதியில், சுமார் 120-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதுவரை இங்குள்ள பெரும்பாலான வீடுகளில் கழிப்பிட வசதி இல்லை. ஆனால்,பொதுக்கழிப்பிடமும் இல்லை என்பதுதான்
வேதனை.
அதிகாலை வந்துவிட்டால், இப்பகுதி பெண்கள், பள்ளி செல்லும் மாணவ மாணவியர்கள், மூதாட்டிகள் வயல்வெளிகள், சாலையோரங்கள், முட்புதர்கள் ஒதுக்குப்புற மறைவிடங்களைத் தேடி அலையும் அவலநிலை பல ஆண்டுகளாகத் தொடர்வது நாட்டின் சமுதாய அவலம்.
பகல் நேரங்களில் கழிப்பிடம் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டால், அப்பகுதி பெண்கள் நிலை சொல்லி மாளாது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, ஆடம்பர வசதிகள், நாகரீகம் போன்றவை வளர்ந்த இக் காலத்திலும் இது போன்ற நிலை தொடர்வதுதான் பரிதாபத்திற்குரியது.
இது போன்ற நிலை இருப்பதை அறிந்தும் இதுவரை அரசும்-அதிகாரிகளும் எங்கள் பகுதிக்கு பொதுக்கழிப்பிடம் கட்டித்தர இதுவரை முன்வரவில்லை என்பது அப்பகுதி மக்களின் ஒட்டுமொத்த குற்றச்சாட்டு.
பயனற்ற முழு சுகாதாரத் திட்டம்: பொதுக்கழிப்பிடம் இல்லாத வீடுகளில் பொதுக்கழிப்பிடங்களை உருவாக்க வேண்டும் என அரசு முழு சுகாதாரத்திட்டத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்தியது. பொது இடங்களை கழிப்பிடமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு இத் திட்டத்தை செயல்படுத்தியது. இதன்படி வீடுகளில் கழிப்பிடம் கட்ட முன்வருபவர்களுக்கு அரசு ரூ.1250 மானியமாக வழங்கியது. ஆனால், இத்திட்டம் இப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிலும் நடைமுறைப்படுத்தவில்லை. இங்கு வசிக்கும் மக்களின் வீடுகளில் இடவசதியில்லாததும் இதற்கு ஒரு காரணம்.
நிதி ஒதுக்கியும் முடிவடையாத பொதுக்கழிப்பிடம்: கூனவேலம்பட்டிபுதூர் ஊராட்சி, கடந்த 2007-08 ம் ஆண்டு நிர்மல் புரஸ்கார் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. அந்த விருதுக்கான பரிசுத் தொகையை பஞ்சாயத்துப் பணிகளுக்குச் செலவிட தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. அதன்படி ஊராட்சிக்குட்பட்ட கரையான்திண்ணிபுதூர் என்ற இடத்தில் ரூ.2 லட்சம் செலவில் பொதுக்கழிப்பிடம் கட்ட மாவட்ட நிர்வாகம் சம்மந்தப்பட்ட ஊராட்சிக்கு இந்த ஆண்டு பிப்ரவரி 3-ல் அனுமதி வழங்கியது. இதையடுத்து ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், கழிப்பிடம் கட்டும் பணிகளுக்கு டெண்டர் விட்டு ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியது.
ஆனால், சிலரது ஆட்சேபனையால் அப்பகுதியில் கழிப்பிடம் கட்டும் பணியில் தடை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், பல மாதங்களாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இது குறித்து, அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை.
இந்நிலையில், ஜூலை 27-ல் கழிப்பிடம் கட்டும் பணியை நிறுத்தி வைக்கும்படி உதவி இயக்குனர் (ஊராட்சி) கூனவேலம்பட்டி ஊராட்சிக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் கழிப்பிடப் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டபாடில்லை.
பரிதவிக்கும் பெண்கள்: இப் பகுதியில் உள்ள வீடுகளில் தொடரும் கழிப்பிடப் பிரச்னையால் எங்கள் பெண்கள் குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதுவரை இதனை கண்டுகொள்ளாத அரசு இனியாவது இதனை உணர வேண்டும் என வேதனையை வெளிப்படுத்துகின்றனர் இப் பகுதி பெண்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.