இலவச பம்ப் திட்டம்: கோவைக்கு ஆர்டர் கிடைக்குமா?

கோவை, ஆக.17: தமிழக அரசு அறிவித்துள்ள இலவச விவசாய பம்ப் திட்டத்துக்கான பம்ப் உற்பத்தி ஆர்டரை கோவையில் உள்ள பம்ப் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளது.   தமிழகத்தில் உ
Updated on
2 min read

கோவை, ஆக.17: தமிழக அரசு அறிவித்துள்ள இலவச விவசாய பம்ப் திட்டத்துக்கான பம்ப் உற்பத்தி ஆர்டரை கோவையில் உள்ள பம்ப் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளது.

  தமிழகத்தில் உள்ள விவசாயிகள் தரம் குறைவான பம்ப்களை பயன்படுத்துவதால் 20 சதவீத மின்சாரம் விரயமாகிறது என்றும், எனவே பழைய மோட்டார் பம்ப்களுக்கு பதிலாக விவசாயிகளுக்கு புதிய பம்ப்களை இலவசமாக வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் சுதந்திர தின உரையில் தமிழக முதல்வர் மு.கருணாநிதி அறிவித்துள்ளார்.

  இத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தினால் விவசாயிகளுக்கு நன்மை கிடைப்பதுடன், பம்ப் உற்பத்தியாளர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக மாறும் என்றும் கோவையில் உள்ள பம்ப் உற்பத்தி நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன. பம்ப் உற்பத்தியில் நாட்டிலேயே கோவை நகரம் முதலிடத்தில் இருப்பதால் தமிழக அரசின் இத் திட்டத்துக்கான பம்ப் உற்பத்தி ஆர்டரை, கோவையில் உள்ள நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் பம்ப் நிறுவன அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

     தமிழகத்தில் பம்ப் உற்பத்தியின் கேந்திரமாக  விளங்கும் கோவையில் 20}க்கும் மேற்பட்ட பெரிய பம்ப் உற்பத்தி நிறுவனங்கள், 50 நடுத்தர நிறுவனங்கள், 1000 குறு நிறுவனங்கள் பம்ப் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இவற்றில் சுமார் 400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஐ.எஸ்.ஐ. முத்திரை உரிமம் பெற்றுள்ளன.

  பெரிய நிறுவனங்கள், நடுத்தர நிறுவனங்கள், குறு நிறுவனங்கள் ஆகியன ஆண்டுக்கு தலா | 1000 கோடி என மொத்தம் | 3 ஆயிரம் கோடிக்கு பம்ப் உற்பத்தி செய்கின்றன. மலிவு விலையில் நீர்மூழ்கி பம்ப், வீடுகளில் பயன்படுத்தப்படும் ஜெட் பம்ப், மோனோ பிளாக்  உள்ளிட்ட பம்ப் வகைகள் அரை எச்.பி. முதல் 15 எச்.பி. வரை இங்கு தயாரிக்கப்படுகின்றன.

  "தமிழக அரசு அறிவித்துள்ள திட்டத்தின்கீழ் 3 முதல் 5 குதிரைத்திறன் கொண்ட மோட்டார் பம்ப்கள், திறந்தவெளி கிணற்றுக்கான நீர்மூழ்கி பம்ப்கள், ஆழ்துளை கிணற்றுக்கான நீர்மூழ்கி பம்ப்கள்தான் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பம்ப்களின் விலை அதன் வகை, குதிரைத்திறனுக்கேற்ப | 20 ஆயிரம் முதல் | 30 ஆயிரம் வரை இருக்கும். அதன் உதிரிப் பாகங்களின் விலை அவற்றின் களத் தேவைக்கேற்ப இருக்கும்.

  இத் திட்டத்துக்கு 12 லட்சம் முதல் 15 லட்சம் வரை மோட்டார் பம்ப்கள் தேவைப்படும். இவற்றை உற்பத்தி செய்ய குறைந்தபட்சம் 2 முதல் 3 ஆண்டுகள் ஆகும். இத் திட்டத்தை ஒரே ஆண்டில் நடைமுறைப்படுத்த விரும்பினால் | 150 கோடி செலவாகும். பல்வேறு உற்பத்தி நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்தால் 4 மாத அவகாசத்திலும் தயாரிக்க முடியும். இத் திட்டத்தை அமல்படுத்தினால் 20 முதல் 35 சதவீதம் வரை மின்சாரம் சேமிக்கப்படும். எனவே இத்திட்டத்துக்கான ஆர்டரை கோவை நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும்.

  இத் திட்டத்துக்கான பம்ப் விற்பனை விலை சலுகை குறித்து சீமா உறுப்பினர்களிடம் விரைவில் ஆலோசனை நடத்தவும் முடிவுசெய்துள்ளோம்' என்கிறார் தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத் (சீமா) தலைவர் ஆர்.ஆர்.ரங்கநாதன்.

  "மொத்த மின்உபயோகத்தில் பெரும்பங்கு மின்சாரம் விவசாயத்துக்குதான் உபயோகமாகிறது. அதிக மின்சாரத்தை உபயோகப்படுத்தும் பழைய பம்ப்செட்களை மாற்றிவிட்டு, குறைந்த மின்சாரத்தை உபோயகப்படுத்தும் தரமான பம்ப்செட்களை உபயோகப்படுத்துவதால் கணிசமான மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும். தமிழக அரசு அறிவித்துள்ள திட்டத்தின்கீழ் வழங்கப்படும் ஆர்டர்களில்  குறைந்தபட்சம் 50 சதவீதத்தை, தரமான பம்ப் உற்பத்தி செய்யும் சிறு, குறுந்தொழில்களுக்கு மட்டுமே ஒதுக்க வேண்டும். அப்போதுதான் விவசாயத்தை மட்டுமன்றி சிறுதொழிலையும் காப்பாற்ற முடியும்' என்கிறார் தமிழ்நாடு பம்ப் மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத் (டேப்மா) தலைவர் ஆர்.கல்யாணசுந்தரம்.

"தமிழக அரசு அறிவித்துள்ள திட்டம் சிறப்பானது. இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் பம்ப்களில் 75 சதவீதம் குறுந்தொழில் பம்ப் உற்பத்தி நிறுவனங்களில் வாங்க வேண்டும். பம்ப் உற்பத்தி நிறுவனங்களின் சங்கங்களுக்கு ஆர்டர்களை வழங்கினால் தரமான பம்ப்களை அரசுக்கு வழங்க எளிதாக இருக்கும்'' என்கிறார் கோவை மாவட்ட குறு பம்ப் மற்றும் உதிரிப் பாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்க (கோப்மா) தலைவர் ஏ.வி.கருப்பசாமி.

"சிறு, குறு விவசாயிகளுக்கு இலவசமாக மின்மோட்டார் வழங்கும் திட்டம் வரவேற்புக்குரியது. இந்த அறிவிப்பு சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டுமன்றி சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கும் வரப்பிரசாதம். இந்த மின்மோட்டார் பம்ப்களை தமிழக நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும்' என்கிறார்  கோவை மாவட்ட சிறுதொழில் சங்கத் (கொடிசியா) தலைவர் எம்.கந்தசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com