தேர்தல் நெருங்கும் சமயம்... மீண்டும் கிளம்பும் கள் இயக்கம்

வெள்ளக்கோவில், டிச. 27: தமிழக சட்டப் பேரவைக்கு தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் மீண்டும் வேகமெடுத்துள்ள கள் இயக்கத்தால், இதுகுறித்து அரசியல் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம்
Updated on
2 min read

வெள்ளக்கோவில், டிச. 27: தமிழக சட்டப் பேரவைக்கு தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் மீண்டும் வேகமெடுத்துள்ள கள் இயக்கத்தால், இதுகுறித்து அரசியல் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கள்ளுக்கு அனுமதி குறித்த பிரச்னையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு ஆதரவாகக் கருத்து தெரிவித்திருந்த பல்வேறு கட்சிகளின் நிலைப்பாடு, தேர்தலுக்குப் பின் தலைகீழாக மாறியது. கள் இறக்க அனுமதியளிக்க வேண்டும் என்று ஆரம்பம் முதலே தீவிரமாக போராடிவரும் தமிழ்நாடு கள் இயக்கம் தற்போது மீண்டும் தங்கள் கோரிக்கையை தூசு தட்டியுள்ளது.  

முதன்முதலில் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு "கள் வேண்டுவோர் கழகம்' என்ற அமைப்பு செயல்பட்டது. கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர் மாவட்ட தென்னை விவசாயிகள், ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த பனைத் தொழிலாளர்கள் கள் இறக்க வேண்டி பல்வேறு அமைப்புகளாக போராடி வந்தனர். இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து 2001ல் "தமிழ்நாடு கள் இயக்கம்' உருவானது.

தமிழ்நாட்டில் 1987லிருந்து, கள் இறக்குவதற்கும் அருந்துவதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. கள்ளில் கலப்படம் செய்வதை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, 2005ல் தமிழக அரசு சார்பு செயலர் இரா.ரமா தெரிவித்துள்ளார்.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி மாநிலங்களில் கள் இறக்கி, விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன், கலப்படத்தைக் கட்டுப்படுத்தும் ஆளுமை இருக்கும்போது இங்கு இல்லையா? என்பது கள் ஆதரவாளர்களின் கேள்வி.

தமிழக அரசே டாஸ்மாக் மதுக்கடைகளை நடத்தி பீர், பிராந்தி, விஸ்கி போன்ற இந்திய தயாரிப்பு அயல் நாட்டு மதுவகைகளை விற்கும்போது கள்ளுக்கு தடை தேவையற்றது என்கின்றனர் இவர்கள்.

2008, செப். 16 அன்று சென்னையில் பல்வேறு அமைப்புகளின் ஆதரவுடன் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் எடுத்த முடிவுப்படி, 2009 ஜன. 21 முதல் கள் இறக்கப்பட்டு, விற்பனையும் செய்யப்பட்டது. அந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், பாஜக தலைவர் இல.கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், அப்போதைய மதிமுக அவைத்தலைவர் மு.கண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

கள் உடலுக்கு கெடுதல் என்று நிரூபித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று கள் இயக்கம் அறிவித்தது. பாஜக, மதிமுக, சமக, இந்து மக்கள் கட்சி, கொமுக, தேமுதிக, தமிழ்நாடு நாடார் பேரவை, நாடார் மஹாஜன சங்கம், தென்னை-பனை தொழிலாளர் சங்கம் போன்றவை கள் இறக்க ஆதரவு தெரிவித்தன.

அதேசமயம், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும், கள் இறக்கும் போராட்டத்தைக் கைவிடக் கோரியும், சென்னையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது. ஆனால் காங்கிரஸின் அப்போதைய மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், குமரி ஆனந்தன் ஆகியோர் கள் இறக்கும் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்றனர். நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, "அதிமுக அணி வெற்றி பெற்றால் கள் இறக்க ஆய்வுக்குழு அமைக்கப்படும்' என்று அக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்தார். முதல்வர் மு.கருணாநிதியோ, "இது பற்றி அரசு தீவிரமாக பரிசீலனை செய்யும். தேர்தலுக்குப் பிறகு குழு அமைத்து முடிவு செய்யப்படும்' என்றார்.

தேர்தல் நடந்து முடிந்த பிறகு போலீஸôரின் தீவிர நடவடிக்கையால் கள் இறக்குவது முற்றிலும் நிறுத்தப்பட்டது. பின்னர் தென்னை, பனைத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியம் தலைமையில் குழு ஒன்றை 2009, மே 30ல் தமிழக அரசு அமைத்து, ஆறு மாத காலத்தில் இக்குழு வழங்கும் அறிக்கையின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்திய அரசியலமைப்பு சட்டம், 47-வது பிரிவு, "கள் மது அல்ல, அது உணவின் ஒரு பகுதி' என்று கூறுகிறது. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையிலும், மீனவர், நெசவாளர், கள் இறக்குவோர் நலன் பேணும் வகையில் திட்டங்கள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் தமிழக அரசு கள்ளுக்கு தடை விதித்துள்ளது - என்று கள் இயக்கம் குற்றம் சாட்டுகிறது.வரும் ஜன. 21-ம் தேதி முதல் மீண்டும் கள் இறக்கி விற்பனை செய்யப்படும் என கள் இயக்கம் தற்போது அறிவித்துள்ளது. இதனால், தேர்தலை எதிர்கொள்ளும் நிலையிலுள்ள அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கள் தொடர்பான தங்கள் நிலைப்பாட்டை  அரசியல் கட்சிகள் தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com