10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதோர் உதவித்தொகை பெற நீலகிரியில் யாரும் விண்ணப்பிக்கவில்லை

உதகை, டிச. 28: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகைக்காக நீலகிரி மாவட்டத்தில் இதுவரை ஒருவர் கூட விண்ணப்பிக்காதது மாவட்ட வேலைவாய்ப்புத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்
Updated on
2 min read

உதகை, டிச. 28: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகைக்காக நீலகிரி மாவட்டத்தில் இதுவரை ஒருவர் கூட விண்ணப்பிக்காதது மாவட்ட வேலைவாய்ப்புத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் சார்பில் படித்து வேலையில்லாமல் இருப்போருக்கு மாதாந்திர உதவித் தொகை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.150, பிளஸ் 2 படித்தவர்களுக்கு மாதம் ரூ. 200, பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்களுக்கு மாதம் ரூ. 300 வீதம் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 761 பேரும், பிளஸ் 2 முடித்த 1,368 பேரும், பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் படித்த 307 பேரும் பயனடைந்து வருகின்றனர். 3 மாதத்திற்கு ஒருமுறை இவர்களது வங்கிக் கணக்கில் உதவித் தொகை செலுத்தப்படும்.

10-ம் வகுப்புக்கு மேல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவதைப் போல, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கும் உதவித் தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்களுக்கு மாதம் ரூ. 100 உதவித் தொகையாக வழங்கப்படும்.9-ம் வகுப்பு தேர்ச்சியடைந்து 10-ம் வகுப்பில் தோல்வியுற்றவர்கள் தமது கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் உயிர்ப் பதிவேட்டில் காத்திருப்பவர்களாக இருக்க வேண்டும்.

 அதேபோல, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருந்தால் 45 வயதை கடக்காதவர்களாகவும், பிற பிரிவினர் 40 வயதைக் கடக்காதவர்களாகவும் இருக்க  வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 50,000-க்குள்ளும், தமிழகத்தில் குறைந்தது 15 ஆண்டுகள் வசிப்பவர்களாகவும் இருக்க வேண்டுமென்பதும் அவசியம்.

இத்திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் 850 பேர் பயனடைவர் என்பதால் இதுகுறித்து விண்ணப்பிக்க அறிவிப்பு

வெளியிடப்பட்டது. ஆனால், யாரும் விண்ணப்பிக்காததால் 850 பேரின்வீட்டு முகவரிக்கு தனித்தனியாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து கடிதமும் அனுப்பப்பட்டது.

 ஆனால், டிசம்பர் 28-ம் தேதி வரை 10 பேர் மட்டுமே வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வந்து விண்ணப்பம் பெற்றுச் சென்றுள்ளனர். இவர்களது விண்ணப்பம் டிச. 30-ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கொடுக்கப்பட்டால் மட்டுமே நடப்பு காலாண்டிற்கான உதவித் தொகையைப் பெற முடியும். இல்லாவிட்டால் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலாண்டில்தான் இவர்கள் உதவித்தொகை பெற முடியும்.

 படித்து வேலையில்லாமல் இருப்போர் நலனுக்காக அரசு அறிவித்துள்ள இந்த உதவித்தொகையை பெற நீலகிரி மாவட்டத்தில் 850 பேர் தகுதியுள்ளவர்களாக இருந்தும் அதற்காக விண்ணப்பித்துள்ளோர் எவருமே இல்லை என்பது வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

 இதுதொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பழ.தனபாலன் கூறுகையில், அரசின் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. பயனடைய விருப்பமில்லாத நிலையில் இத்திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்றே தெரியவில்லை என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com