சேலம், பிப்.25: மாநிலத்திலேயே எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டவர்களை அதிகளவில் கொண்டுள்ள மாவட்டம் என்ற மோசமான சாதனையை சேலம் மாவட்டம் புரிந்துள்ளது.
அலட்சியம் காரணமாக சிகிச்சையை தொடராதவர்கள், அவமானம் காரணமாக சிகிச்சையையே பெறாதவர்கள் அதிகரித்து வருவதால் இரண்டாம்கட்ட கூட்டு மருந்து சிகிச்சை பெற வேண்டிய நிலையில் உள்ளவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
உயிர்க் கொல்லி என்றழைக்கப்பட்டு பின்னர் வாழ்நாளை குறைக்கும் நோய் என்ற அடையாளத்தைப் பெற்றுள்ள எய்ட்ஸ் நோய், தமிழகத்தில் பரவியது 1986-ல் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது போதுமான விழிப்புணர்வு இல்லாமை, நோயின் அபாயம் குறித்து தெரியாததால் தொடர்ந்து மிக வேகத்தில் எய்ட்ஸ் பரவியது.
உலகில் இப்போது சுமார் 4 கோடி பேர் எச்.ஐ.வி., எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களாகவும், ஆசியாவில் 47 லட்சம் பேரும், அதில் இந்தியாவின் பங்கு 25 லட்சமாகவும் உள்ளது. ஓரளவு விழிப்புணர்வு வந்த பிறகு தாம்பரத்தில் 2004-ல் கூட்டு மருந்து சிகிச்சை மையம் தொடங்கப்பட்டபோது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் நாமக்கல், மதுரை, சேலம் மாவட்டங்களில் அதிகளவில் எய்ட்ஸ் பரவியுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து மதுரை, நாமக்கல்லில் கூட்டு மருந்து சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் நாமக்கல்லே எய்ட்ஸின் தலைநகர் என்று சொல்லும் அளவுக்கு இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்த பெருமையை(?) சேலம் மாவட்டம் தட்டிப் பறித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
60 ஆயிரத்துக்கும் அதிகம்
லாரி புகழ் மாவட்டமான நாமக்கல்லில் கூட்டு மருந்து சிகிச்சை பெற பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 10,550 மட்டுமே. ஆனால் மொத்த மக்கள் தொகையில் குறைந்தது 2 சதவீதம் பேர் இந்த நோய் தொற்றுக்குள்ளாகி இருப்பார்கள் என்று அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. நாமக்கல்லின் மொத்த மக்கள் தொகை 15 லட்சம் என்ற நிலையில் 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அரசு தெரிவிக்கிறது. ஆனால் உண்மை நிலவரமோ இதைவிட மிக அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
நாமக்கல் இப்படி என்றால் 30 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட சேலத்திலோ 2.25 சதவீதம் பேர் எச்.ஐ.வி. தொற்று உள்ளவர்கள், அதாவது ஏறத்தாழ 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளதாக அரசு விவரம் தெரிவிக்கிறது. ஆனால் இங்கும் அதைக் காட்டிலும் உண்மை நிலவரம் மிக அதிகமாக இருக்கும் என்கின்றன தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்.
109 கர்ப்பிணிகளுக்கு எய்ட்ஸ்
சேலம் மாவட்டத்தில் 38 ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மையம்,பரிசோதனை மையங்கள் 38 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இதில் கடந்த ஆண்டு மட்டும் 92 ஆயிரம் பேர் தானாக முன்வந்து சோதனை செய்து கொண்டனர். அதில் 1,024 ஆண்களுக்கும், 820 பெண்களுக்கும் தொற்று உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 56 ஆயிரம் கர்ப்பிணிகளை சோதனை செய்ததில் 109 பேருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சேலம் அரசு மருத்துவமனை, ஆத்தூர், மேட்டூர், சங்ககிரி ஆகிய இடங்களில் உள்ள சுக வாழ்வு மையங்களில் இப்போது 15, 484 பேர் பால்வினை நோய்களுக்கு சிகிச்சை பெறுகின்றனர். சேலம் அரசு மருத்துவமனையில் செயல்படும் ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து சிகிச்சை மையத்தில் (நோய் எதிர்ப்பு சக்தி குறைவதைத் தடுக்க இங்கு மருந்து வழங்கப்படும்) 11 ஆயிரத்து 398 பேர் சிகிச்சை பெற பதிவு செய்துள்ளனர்.
இரண்டாம் கட்ட
கூட்டு மருந்து சிகிச்சை
இவர்களில் 4,981 பேருக்கு முதல் கட்ட சிகிச்சை இப்போது அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளாததாலும், முற்றிய நிலையிலேயே சிகிச்சை வருபவர்களாலும் இவர்களுக்கு சென்னையில் மட்டும் அளிக்கப்பட்டு வரும் இரண்டாம்கட்ட ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து சிகிச்சையை பெற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் மட்டும் இதுபோன்று சுமார் 50 நோயாளிகள் இருப்பதாக அரசு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இதுகுறித்து சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர் நிர்மல்சன், டாக்டர் அருணகிரி (காசநோய்) ஆகியோர் கூறியது:
நோய்த் தொற்று அதிகரித்து வருவதால் கூட்டு மருந்து சிகிச்சையை தாலுகாக்களிலும் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பல தொற்றாளர்கள் அரசு மருத்துவமனை, பரிசோதனை மையத்துக்கு வர பயந்து கொண்டு நாட்டு வைத்தியர்களிடம் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பண விரயம் மட்டுமே ஏற்படும். எய்ட்ûஸ குணமாக்குவதாக கூறிக் கொண்டு செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சேலத்தில் காசநோயாளிகளை அதிகளவில் நோய் தொற்றுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2,296 நோயாளிகளை சோதனை செய்ததில் 489 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 65 பேர் கடந்த ஆண்டில் இறந்துள்ளனர்.
தொற்று இருக்கலாம் என்று சந்தேகப்படுபவர்கள் அரசு மருத்துவமனைக்குச் சென்று தயங்காமல் சோதனை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் அவர்களது வாழ்நாள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்றனர்.
ஆத்தூரில் ஏன் அதிகம்
இதுகுறித்து மாவட்ட எச்.ஐ.வி. தொற்று உள்ளவர்கள் சங்கத் தலைவர் பி.நாகராஜன் கூறியது:
நாமக்கல்லைக் காட்டிலும் சேலத்தில் எய்ட்ஸ் தொற்று இப்போது அதிகரித்து வருகிறது. இருப்பினும் தமிழகம் மகாராஷ்டிரம், ஆந்திரத்துக்கு அடுத்த நிலைக்குச் சென்றுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து மும்பை உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு வேலைக்குச் செல்பவர்கள் அதிகம் என்பதால் ஆத்தூர், வாழப்பாடி பகுதிகளில் மாவட்டத்திலேயே அதிகளவில் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர்.
அரசு கணக்கெடுப்பில் குறைந்த எண்ணிக்கையே கிடைப்பதற்கு காரணம் பல நோயாளிகள் உள்ளூரில் சிகிச்சை பெற தயங்கிக் கொண்டு வெளியூர் சென்று வருகின்றனர். சிலர் மருத்துவமனையை விட்டு வெளியே வந்ததும், நமக்கு எய்ட்ஸ் இருக்கிறதே என்ற வேதனையில் மருந்து சீட்டை கிழித்துப் போட்டுவிட்டு யாருக்கும் தெரிவிக்காமல் வாழ்ந்து வருகின்றனர். உயிர் வாழ வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இயல்பே. எனவே தயக்கத்தைத் தகர்த்தால் அதிக நாள்கள் வாழலாம் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.