பூஜ்ஜியத்தில் இருந்து ராஜ்ஜியத்துக்கு...

கோவை, ஜூலை 26: மூடக்கூடிய நிலையில் இருந்த தொழில் நிறுவனத்தை, முன்னணி தொழில் நிறுவனமாக மாற்றி சாதனை படைத்திருக்கிறார் கோவையைச் சேர்ந்த எம்.கிருத்திகா.   கோடிக்கணக்கில் பணம் இருந்தால் எந்தத் துறையிலும்
Updated on
2 min read

கோவை, ஜூலை 26: மூடக்கூடிய நிலையில் இருந்த தொழில் நிறுவனத்தை, முன்னணி தொழில் நிறுவனமாக மாற்றி சாதனை படைத்திருக்கிறார் கோவையைச் சேர்ந்த எம்.கிருத்திகா.

  கோடிக்கணக்கில் பணம் இருந்தால் எந்தத் துறையிலும் தடம் பதிக்கலாம். தொழில்துறையும் அதற்கு விதிவிலக்கல்ல. எந்த பின்புலமும் இன்றி முதல் தலைமுறை தொழில்முனைவோராக இருப்பவர்கள் தொழில்துறையில் சாதிப்பது மிகப்பெரிய விஷயம். இதுபோல சாதனை படைத்த முதல் தலைமுறை தொழில்முனைவோர்களில் முன்னிலையில் இருக்கிறார் கிருத்திகா.

  அப்படி என்னதான் சாதனை படைத்திருக்கிறார்? கோவை பீளமேட்டில் ஸ்ரீராம் கம்ப்ரஸர்ஸ் நிறுவனத்தை, கிருத்திகாவின் கணவர் டி.ராமச்சந்திரன் 1980-ல் துவக்கினார். நல்ல நிலையில் இருந்த இந்த நிறுவனம் 1988-ல் நலிவடைந்தது. இதனால் புஞ்சை புளியம்பட்டியில் உள்ள தனது பஞ்சாலை மீது ராமச்சந்திரன் கவனத்தை திருப்பினார்.

 நலிவடைந்த நிலையில் இருந்த கம்ப்ரஸர் நிறுவனத்தை எப்படியாவது தூக்கி நிறுத்த வேண்டும் என்ற தீப்பொறி கிருத்திகா மனதில் ஏற்பட்டது. படித்தது இதழியல்,  நிறுவனமோ பொறியியல் சார்ந்தது. இருப்பினும் விடாமுயற்சி, துணிச்சலுடன்

தனது கணவரின் நிறுவனப் பொறுப்பை ஏற்றார். 1993-ல் தொடங்கிய அவரது பணி, ஏற்கெனவே இருந்த தொழிலாளர்களின் உதவியுடன் இரவு பகல் பாராமல் உழைத்து, 7 ஆண்டுகளில் பழைய நிலைக்குத் தூக்கி நிறுத்தினார்.

 சர்வதேச பொருளாதார நெருக்கடி என்ற வடிவில், 2008-ல் இந் நிறுவனத்துக்கு மீண்டும் சோதனை வந்தது. அப்போதும் தனது சாதுர்யத்தால் நிறுவனத்தை காப்பாற்றினார் கிருத்திகா. அதுவரை கம்ப்ரஸர்களை மட்டுமே தயாரித்து வந்த இந்த நிறுவனம், கோவையில் உள்ள முன்னணி பம்ப் நிறுவனத்துக்கு, பம்ப்களையும் உற்பத்தி செய்து வழங்க ஒப்பந்தம் செய்து கொண்டது. இதுவே நெருக்கடியிலும், வெற்றி காண வழிவகுத்தது.

சாதனை குறித்து கிருத்திகா கூறியது:

மூடக்கூடிய நிலையில் இருந்த நிறுவனத்தை நடத்துவது என்பது மிகப்பெரிய சவாலான செயல். தற்போது பெயர் சொன்னால் எளிதில் தெரியும் அளவுக்கு எங்களது நிறுவனம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழும் பெற்றுவிட்டோம்.

  ஒன்று முதல் 5 குதிரைத் திறன் வரையிலான கம்ப்ரஸர்கள் (வீடு மற்றும் தொழில் நிறுவன உபயோகம்) எங்களது சொந்த பிராண்டில் தயாரித்து வருகிறோம். கோவையில் இருக்கும் முன்னணி பம்ப் நிறுவனத்துக்கு பம்ப் தயாரித்துக் கொடுக்கிறோம். 1993-ல் மூன்றாக இருந்த எங்கள் நிறுவனத்தின் தொழிலாளர் எண்ணிக்கை இப்போது 40 ஆக உயர்ந்துள்ளது.

  ஆரம்ப காலத்தில் ஒரு மாதத்துக்கு 100 கம்ப்ரஸர்கள் மட்டுமே தயாரிக்கக்கூடிய நிலையில் உற்பத்தித் திறன் இருந்தது. இப்போது 500 கம்ப்ரஸர்கள், 1,500 பம்ப்கள் தயாரித்து வருகிறோம். கர்நாடகம், குஜராத் மற்றும் தமிழகத்தில் எங்களது கம்ப்ரஸர்கள், டீலர்கள் மூலம் விற்பனையாகி வருகின்றன.

 பொறியியல் துறையில் இருந்து ஜவுளித் துறைக்குச் சென்ற எனது கணவர், அத்துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய நெருக்கடியால் இதே நிறுவனத்துக்கு மீண்டும் திரும்பி வந்துவிட்டார்.  150 பேரை கொண்ட பெரிய யூனிட் துவக்க திட்டமிட்டுள்ளோம். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் தயார் நிலையில் இருக்கிறோம்.

 ஆரம்ப காலத்தில் இருந்த துணிச்சலும், சவாலை எதிர்கொள்ளும் திறனும் இப்போது இல்லை. எதையும் ஆழமாக யோசித்து தான் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியுள்ளது. சர்வதேச பொருளாதார நெருக்கடி போன்ற எதிர்பாராத பாதிப்புகள் தான் இதற்கு காரணம்.

  பெரிய தொழில் நிறுவனங்களிடம் ஆர்டர்கள் பெற்று தரமான பொருட்களை உற்பத்தி செய்வது தான் சிறிய தொழில் நிறுவனங்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும்.

  2020-ல் இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் தொழில் வளர்ச்சியில் முன்னிலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் மலிவு விலையில் தரமான பொருட்கள் தயாரிக்கப்படுவதால் இங்கிருக்கும் தொழில் முனைவோர்களுக்கு நல்ல வாய்ப்பு காத்திருக்கிறது. அதற்காக அனைத்து தொழில் முனைவோர்களும் இப்போதே தயாராக வேண்டும் என்கிறார் கிருத்திகா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com