மீண்டும் புத்துயிர் பெறும் கொய் மலர் சாகுபடி

உதகை, நவ. 17: தேசிய தோட்டக் கலை இயக்கத்தின் சார்பில் வழங்கப்படும் மானியம் நடப்பாண்டில் 3 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதையடுத்து, நீலகிரி மாவட்டத்தில் கொய் மலர் சாகுபடி தொழில் மீண்டும் புத்துயிர் பெறும் என
Updated on
2 min read

உதகை, நவ. 17: தேசிய தோட்டக் கலை இயக்கத்தின் சார்பில் வழங்கப்படும் மானியம் நடப்பாண்டில் 3 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதையடுத்து, நீலகிரி மாவட்டத்தில் கொய் மலர் சாகுபடி தொழில் மீண்டும் புத்துயிர் பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

 இந்தியாவில் தோட்டக் கலைத் துறை பயிர்களில் சாகுபடியினை மேம்படுத்துவதற்காக தேசிய தோட்டக் கலை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இத்திட்டம் கடந்த 2001ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டாலும், நீலகிரி மாவட்டத்தில் 2006ம் ஆண்டு முதல் தான் அமலுக்கு வந்தது. இத்திட்டத்தின் கீழ் பழப்பயிர் சாகுபடியை அதிகரித்தல், கொய்மலர் சாகுபடி மற்றும் இயற்கை வேளாண்மை, மண்புழு உரம் தயாரித்தல் மற்றும் உழவர் பயிற்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

 இதில் நீலகிரி மாவட்டத்தில் பழப்பயிர் சாகுபடிக்காக வாழை, கொக்கோ மற்றும் நெல்லிக்காய் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

கொய்மலர் சாகுபடியில் பல்வேறு பகுதிகளில் பசுமைக் குடில்கள் மூலம் இயற்கை வேளாண்மை முறையின் கீழ் மலர் சாகுபடி வலுப்படுத்தப்பட்டு வருகிறது. உழவர்களுக்கான பயிற்சி திட்டங்களில் மாவட்டங்களுக்குள்ளும், வெளி மாவட்டங்களிலும், வெளி மாநிலங்களிலும் விவசாயிகளுக்கு நவீன விவசாயம் குறித்த தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது.

 கொய் மலர் சாகுபடியில் 500 சதுர மீட்டருக்குட்பட்ட பகுதிகளில் பசுமைக்குடில்கள் அமைத்து மலர் சாகுபடியில் ஈடுபட இதுவரை |3 லட்சம் கடனாகவும், அதில் |1.5 லட்சம் மானியமாகவும் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், நடப்பாண்டில் இது அதிகரிக்கப்பட்டுள்ளது. கடனுதவியாக |4.67 லட்சமும், அதில் மானியமாக |2.33 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 அத்துடன் கொய்மலர் சாகுபடியை 1,000 ச.மீ.பரப்பளவிலும் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.9.35 லட்சம் கடனாகவும், இதில் |4.67 லட்சம் மானியமாகவும் வழங்கப்படுகிறது.

இதன்மூலம் கொய் மலர் சாகுபடி தொழில் மாவட்டத்தில் மீண்டும் சூடுபிடிக்குமென்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

 இதற்கிடையே கொய் மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளவர்கள் வங்கிகளில் தாங்கள் பெற்ற கடனை முறையாக திருப்பி செலுத்துவதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. விவசாயக் கடன்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதைப்போல, தாங்கள் பெற்ற கடன்களும் தள்ளுபடி செய்யப்படுமென்ற எண்ணத்தில் வங்கிக் கடனை முறையாக திருப்பி செலுத்துவதில்லை என வங்கியாளர்கள் கூறுகின்றனர்.

 தற்போது மாவட்டத்தில் ஏறத்தாழ 517 விவசாயிகள் கொய் மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள நிலையில் நாளொன்றுக்கு சராசரியாக 2 லட்சம் கொய் மலர்கள் வரை வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன.

 இருப்பினும் மலர் சாகுபடி தொழில் தற்போது நலிவடைந்து விட்டதாகவும், உற்பத்தி செய்யப்படும் கொய் மலர்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை எனவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

 இந்நிலையில் தற்போது தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் மூலம் கடனுதவியும், மானியத் தொகையும் 3 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் முனைப்புடன் செயல்பட்டால் கொய்மலர் சாகுபடியில் மாவட்டத்தில் மீண்டும் ஒரு புரட்சியையே ஏற்படுத்த முடியுமென தோட்டக் கலைத் துறையினர் நம்பிக்கையுடன் கூறுகின்றனர். இந்தப் புரட்சி விவசாயிகளின் கையில் தான் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com