பைசன்வேலி பகுதியில் மரங்கள் வெட்டப்படுவது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உதகை, அக். 30:   முதுமலை புலிகள் காப்பகம் அருகே நீலகிரி வடக்கு வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பைசன்வேலி பகுதியில் தமிழ்நாடு தனியார் காடுகள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட நிலத்தில் மரங்கள
Updated on
1 min read

உதகை, அக். 30:   முதுமலை புலிகள் காப்பகம் அருகே நீலகிரி வடக்கு வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பைசன்வேலி பகுதியில் தமிழ்நாடு தனியார் காடுகள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட நிலத்தில் மரங்கள் வெட்டப்படுவது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 நீலகிரி மாவட்டத்தில் வனப் பாதுகாப்புச் சட்டங்கள் தற்போது கடுமையாக அமலாக்கப்பட்டு வருகின்றன. இதில் தனியார் காடுகள் பராமரிப்புச் சட்டத்தின்கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட நிலங்களை வாங்கவோ அல்லது விற்கவோ வேண்டுமெனில் ஆட்சியர் தலைமையிலான குழுவிடம் தடையில்லாச் சான்று பெற வேண்டும்.  அதேபோல, தனியார் காடுகள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட நிலங்களில் உள்ள மரங்களையும் வெட்ட முடியாது. இதற்கான அனுமதியும் வழங்கப்படுவதில்லை.

 ஆனால், முதுமலை புலிகள் காப்பகம் அருகேயுள்ள பைசன்வேலி பகுதியில் தனியார் காடுகள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட நிலத்தில் வளர்ந்துள்ள 520 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

 தனியார் காடுகள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் வனப் பாதுகாப்பிற்கு எதிரான எவ்வித நடவடிக்கைகளும் இருக்கக் கூடாது என 1980ம் ஆண்டின் வனப்பாதுகாப்புச் சட்டத்திலும், 1947ம் ஆண்டின் தனியார் காடுகள் பராமரிப்புச் சட்டத்திலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதனால், இப்பகுதியில் மரங்களை வெட்ட எப்படி அனுமதிக்கப்படுகிறது என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

 இப்பகுதியில் தற்போது யானைகள் வழித்தடமும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புலி, யானை மற்றும் சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள்  வசித்து வரும் இப்பகுதியில் தற்போது மரங்களை வெட்டினால் இப்பகுதியே மொட்டையாகிவிடும்.

 இதை கருத்தில் கொண்டு மரம் வெட்ட வழங்கப்பட்ட உத்தரவை உடனடியாகத்  திரும்பப்பெற வேண்டுமென தமிழக பசுமை இயக்கத்தின் இணைச் செயலர் ஜெயச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 அத்துடன் பைசன்வேலி பகுதியில் எவ்வித வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என கடந்த 2007ம் ஆண்டிலேயே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

  இது ஒருபுறமிருக்க, நீலகிரி வடக்கு வனக்கோட்டத்திற்கு உட்பட்ட தனியார் பட்டா நிலங்களில் யானைகளால் பாதிப்பு ஏற்படாமலிருக்க அகழிகள் வெட்டப்பட்டுள்ளன. யானைகள் வழித்தடமாக அறிவிக்கப்பட்ட நிலங்களில் அகழிகளும் வெட்டப்பட்டுள்ளதால் யானைகளுக்காக ஒதுக்கப்பட்ட பாதையை பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. அதனால், உடனடியாக இந்த அகழிகளை மூட வேண்டுமெனவும் சுற்றுச்சூழல் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

 யானைகளை பாதுகாப்பதற்காக யானைகள் வழித்தடம் என அறிவித்து, அதற்கான அறிவிக்கையையும் அரசே வெளியிட்டுள்ள சூழலில், யானைகள் வசிக்குமிடங்களில் மரங்களை வெட்டுவதற்கும், அகழி வெட்டுவதற்கும் அனுமதி அளித்துள்ளது முரண்பாடாக உள்ளது. இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டால் மட்டுமே இந்த அனுமதிகளுக்கான உண்மையான காரணங்கள் தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com