கோவை தொழில் நிறுவனங்களில் 30% உற்பத்தி பாதிப்பு

கோவை, செப்.13: வெளிமாநில தொழிலாளர்கள் திடீரென வெளியேறியதால் கோவை தொழில் நிறுவனங்களில் கடந்த 2 மாதங்களாக 30 சதவீத உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.   கோவையில் பவுண்டரிகள், ஆட்டோமொபைல் உதிரிப் பாகங்கள் உற்ப
Updated on
2 min read

கோவை, செப்.13: வெளிமாநில தொழிலாளர்கள் திடீரென வெளியேறியதால் கோவை தொழில் நிறுவனங்களில் கடந்த 2 மாதங்களாக 30 சதவீத உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

  கோவையில் பவுண்டரிகள், ஆட்டோமொபைல் உதிரிப் பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், பம்ப் உற்பத்தி நிறுவனங்கள் என பல்வேறு வகையான தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கோவை மற்றும் நகரைச் சுற்றி சுமார் 35 ஆயிரம் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

  பொறியியல் நிறுவனங்களில் இருந்து மட்டும் ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இவற்றில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.

  கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தொடர் மின்வெட்டு, அடுத்து வந்த சர்வதேச பொருளாதார நெருக்கடி ஆகியவற்றால் தொழில்நிறுவனங்களில் உற்பத்தி குறைந்துவிட்டது. இதனால் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திறன்மிகு தொழிலாளர்கள் வேறு தொழில்களுக்குச் சென்றுவிட்டனர். குறிப்பாக, குறுந்தொழில் நிறுவனங்களில் இருந்து பெரும்பாலான திறன்மிகு தொழிலாளர்கள் வெளியேறிவிட்டனர்.

  இதனால் ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறை பிரச்னைக்குத் தீர்வுகாணும் வகையில் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பிகார், ஒரிசா உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கோவை தொழில்நிறுவனங்களில் பணி அமர்த்தப்பட்டனர். அனுபவம் இல்லாமல் சேர்ந்த இவர்கள், கடந்த 2 ஆண்டுகளில் படிப்படியாக பயிற்சி பெற்று திறன்மிகு தொழிலாளர்களாக மாறிவிட்டனர்.

  ஆனால், கடந்த 3 மாதங்களாக வெளி மாநிலத் தொழிலாளர்கள் கோவையில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். கோவை குறிச்சியில் 3 மாதங்களுக்கு முன்பு சமூகவிரோதச் செயலில் ஈடுபட்ட வெளிமாநில தொழிலாளர்கள் சிலரை பொதுமக்கள் தாக்கினர். இச் சம்பவத்தைத் தொடர்ந்து தேவையற்ற வதந்தி பரவியதால் வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறத் தொடங்கினர்.

 ஒரு சில அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து வெளிமாநில தொழிலாளர்களை மிரட்டுவதாகவும், அதற்கு காவல்துறையினர் துணைபோவதாகவும் தொழில்அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.  

 மின்வெட்டு, சர்வதேச பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் உள்ளூர் தொழிலாளர்கள், வேறு தொழில்களுக்கு மாறிவிட்டனர். இதனால், வெளிமாநிலத்தை சேர்ந்த சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிறு, குறுந்தொழில் நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். அவ்வாறு அமர்த்தப்பட்டவர்களில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோவையில் இருந்து வெளியேறிவிட்டனர். இதனால் குறுந்தொழில்கூடங்களில் 30 முதல் 40 சதவீதம் வரை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தில் இருந்து கோவைக்கு வரும் தொழிலாளர்கள் குறித்த விவரத்தை உள்ளூர் காவல் நிலையங்களில் பராமரிக்க வேண்டும். அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுவதுடன் உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்கிறார் தமிழ்நாடு ஊரகத் தொழில் மற்றும் குறுந்தொழில்முனைவோர் சங்க (டேக்ட்) கோவை மாவட்டத் தலைவர் ஜே.ஜேம்ஸ்.

தேவையற்ற வதந்தி பரவியதால்தான் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் வெளியேறிவிட்டனர். குற்றம் செய்யும் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை. அதே நேரத்தில் தவறு செய்யாத தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கெனவே புகார் செய்துள்ளோம். சொந்த ஊருக்குத் திரும்பிய தொழிலாளர்கள், இன்னும் 10 நாட்களுக்குள் மீண்டும் கோவைக்கு வருவதாக உறுதி அளித்துள்ளனர். தேவையற்ற வதந்தியில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளி மாநில தொழிலாளர்கள் வெளியேறியதால் பவுண்டரிகளில் 30 சதவீத உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது’ என்கிறார் கோவை  குறு மற்றும் சிறு பவுண்டரி அதிபர்கள் சங்கத் (காஸ்மாஃபேன்) தலைவர் சிவ சண்முகக்குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com