கோவை, மார்ச் 15: அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துனர் பணிக்கு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான வயது வரம்பு
குறைக்கப்பட்டுள்ளதால் அவ்விரு பிரிவையும் சேர்ந்தோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அரசுப் போக்குவரத்துக் கழக கோவை மண்டலத்தில் காலியாக இருக்கும் கண்டக்டர் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளன. இதற்கான பதிவு மூப்பு, வயது வரம்பு விவரங்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தால் அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இதில் பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து துடியலூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு அண்மையில் மறியலில் ஈடுபட்டனர்.
அரசு வழிகாட்டுதலின்படியே வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள் கூறியதையடுத்து, நீண்ட நாள்களாக அரசு வேலைக்காக காத்திருக்கும் நடத்துனர் பயிற்சி முடித்தவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தங்களது பிரச்னைக்கு நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
""அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கோவை மண்டலத்தில், 2007}க்குப் பிறகு நடத்துனர் பணிக்கு தற்போதுதான் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு வேலைநியமனத் தடைச் சட்டத்தை நீக்கியது. அதைத் தொடர்ந்து நடத்துனர் பணிக்கு 2007}ல் ஆள்தேர்வு செய்யும்போது பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோருக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 என நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்நிலையில், வயது வரம்பு 35 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் ஏறத்தாழ 2 ஆயிரம் பேர் நடத்துனர் பணிக்கு பதிவு செய்துள்ளனர். வயது வரம்பைக் குறைத்துள்ளது ஏராளமானோருக்கு அரசு வேலைவாய்ப்பு பெற முடியாத நிலை ஏற்படும்'' என்கின்றனர் நடத்துனர் பயிற்சி முடித்தவர்கள். ""கடந்த முறை நடத்துனர் பணிநியமனத்தின்போது அண்டை மாவட்டமான ஈரோட்டிலிருந்து ஏராளமானோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தகுதியான பதிவுதாரர்கள் இல்லாதநிலையில் தான் பிற மாவட்டங்களில் இருந்து தகுதியுள்ள நபர்களுக்கு பணிநியமனம் அளிக்க வேண்டும். ஆனால், கோவை மாவட்டத்தில் நடத்துனர் பயிற்சி முடித்தவர்கள் இருந்தபோதும், ஈரோடு மாவட்டத்திலிருந்து நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற முரண்பாடுகளைத் தவிர்க்கவும், கடந்த முறை இருந்ததைப் போல பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோருக்கான வயது வரம்பை 40 ஆக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.