50 பழமையான மருந்தக கட்டடம் சீரமைக்கப்படுமா?

வெள்ளக்கோவில், ஜன.17: வெள்ளக்கோவிலில் உள்ள 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு கால்நடை மருந்தக கட்டடம் சேதமடைந்து வருவதால் அதனை சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வெள்ளக்கோவில் அருகே உள்ள குமாரவலசைச்
Updated on
1 min read

வெள்ளக்கோவில், ஜன.17: வெள்ளக்கோவிலில் உள்ள 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு கால்நடை மருந்தக கட்டடம் சேதமடைந்து வருவதால் அதனை சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளக்கோவில் அருகே உள்ள குமாரவலசைச் சேர்ந்த நல்லசாமி கவுண்டர், சின்னம்மாள், சத்திபாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி ஆகியோர் ஒரு ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தை கால்நடை மருந்தகத்துக்காக தானமாக வழங்கியுள்ளனர். பின்னர் 19.12.1952-ல் ஆரம்பிக்கப்பட்ட மருந்தகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு அன்றைய தமிழக உணவு மற்றும் விவசாயத்துறை அமைச்சர் பக்தவத்சலம் 05.11.1961-ல் கட்டடத்தை திறந்து வைத்தார்.

 கடந்த 59 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்த மருந்தகத்தில் தற்போது ஒரு மருத்துவர், ஓர் உதவியாளர் பணியில் உள்ளனர். ஏறத்தாழ தினமும் 65 கால்நடைகள் சிகிச்சைக்காக கொண்டு வரப்படுகின்றன. வறட்சியான இப்பகுதியில் செம்மறி ஆடு மற்றும் மாடு வளர்க்கும் விவசாயத் தொழில் பிரதானமாக உள்ளது.

காங்கயம் இன மாடுகள், காளைகள், சிந்து இன மாடுகள், எருமைகள், வெள்ளாடுகளும் வளர்க்கப்படுகின்றன. வியாபார ரீதியிலான கறிக்கோழி பண்ணைகளும் உள்ளன.

மருந்தக மருத்துவர் முகாமுக்கோ, விடுமுறையிலோ சென்றுவிட்டால் அருகிலுள்ள மருந்தகத்திலிருந்து மாற்று மருத்துவர் சிகிச்சையளித்து வருகிறார். மருந்தக கட்டடம் அலுவலக அறை, மருத்துவர் அறை, இருப்பு அறை, ரெக்கார்டு அறை, நூலகம் போன்ற 7 அறைகளுடன் சுமார் 750 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதால் கான்கிரீட் மேற்கூரை சேதமடைந்து மழைக் காலங்களில் பல இடங்களில் தண்ணீர் கசிகிறது. ஆங்காங்கே சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதுடன், மரத்தினாலான கதவு, சன்னல்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலியும் சேதமடைந்துள்ளது.

வளாகத்தில் அகத்தி, கல்யாண முருங்கை, முயல் மசால், வேலி மசால், குதிரை மசால், சுபா புல், கொழுக்கட்டை போன்ற பல்வேறு தீவனப் பயிர் வகைகளும், முயல் காதன், கற்றாழை, கரு ஊமத்தை ஆகிய மருத்துவ குணமுள்ள செடிகளும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வளர்க்கப்படுகிறது. தண்ணீர் தேவைக்காக மருந்தக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கிணறு மற்றும் ஆழ்குழாய் கை பம்புக்கு மின் மோட்டார் பொருத்தினால் உபயோகமாக இருக்கும்.

பழமை வாய்ந்த இந்த மருந்தக கட்டடத்தை புனரமைத்து இன்னும் பல்லாண்டுகள் விவசாயிகளுக்குப் பயன்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதியினரின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com