ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் விநியோகம் முடங்கும் அபாயம்

ஈரோடு, ஆக. 28: வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் கொள்முதலை நிறுத்த மண்ணெண்ணெய் மொத்த வணிகர்கள் (டீலர்கள்) முடிவு செய்துள்ளதால், தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் விநியோகம் முடங்கும் அபாயம் உர
Updated on
2 min read

ஈரோடு, ஆக. 28: வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் கொள்முதலை நிறுத்த மண்ணெண்ணெய் மொத்த வணிகர்கள் (டீலர்கள்) முடிவு செய்துள்ளதால், தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் விநியோகம் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது.

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம் மூலம் விநியோகிக்கப்படும் மண்ணெண்ணெய், மாநிலம் முழுவதும் உள்ள 440 எண்ணெய் டீலர்கள் மூலம் ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.

மாநில உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத் துறையின் உரிமம் பெற்ற மண்ணெண்ணெய் டீலர்கள், மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களிடம் (இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம்) இருந்து மண்ணெண்ணெயைக் கொள்முதல் செய்து, அந்ததந்த மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு மாவட்ட வழங்கல் அலுவலக ஒதுக்கீட்டின்படி விநியோகம் செய்து வருகின்றனர்.

எண்ணெய் டீலர்களுக்கு 1 கிலோ லிட்டருக்கு (1,000 லி.) ரூ. 170 கமிஷனாக வழங்கப்படுகிறது. ஒரு லோடு மண்ணெண்ணெய் (12,000 லி.) விற்பனை செய்தால் ரூ. 2,040 கமிஷன் கிடைக்கும்.

மண்ணெண்ணெய் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரம் மத்திய அரசிடமும், விற்பனை விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரம் மாநில அரசிடமும் உள்ளன. மத்திய அரசு கொள்முதல் விலையை உயர்த்தும்போது, மாநில அரசு விற்பனையை விலையை உயர்த்தினால் மட்டுமே டீலர்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது.

கடந்த ஜூலை மாதம் மண்ணெண்ணெய் கொள்முதல் விலையை மத்திய அரசு திடீரென லிட்டருக்கு 90 பைசா உயர்த்திவிட்டது. ஆனால், கடந்த 1 மாதமாக மாநில அரசு விற்பனை விலையை உயர்த்தவில்லை. இதனால், டீலர்களுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது.

கடந்த ஜூலை 25ம் தேதிக்கு முன் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் கொள்முதல் விலை ரூ. 13.30 பைசாவாக இருந்தது. ஒரு லோடு மண்ணெண்ணெயை டீலர்கள் சுமார் ரூ. 1.59 லட்சத்துக்கு கொள்முதல் செய்து வந்தனர். விலை உயர்த்தப்பட்ட பின் இப்போது ஒரு லோடு மண்ணெண்ணெய் சுமார் ரூ. 1.69 லட்சத்துக்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

இதனால், டீலர்களுக்கு ஒரு லோடுக்கு ரூ. 10,600 வரை கூடுதல் செலவாகிறது. ஒரு லோடுக்கு அரசிடம் இருந்து கிடைக்கும் கமிஷன் ரூ. 2,040 மட்டுமே. இந்நிலையில், ரூ. 10,600 கையில் இருந்து செலவு செய்து பொது விநியோகத் திட்டத்துக்கு மண்ணெண்ணையை விநியோகம் செய்ய வேண்டிய நிலைக்கு டீலர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே இதேபோல கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு கொள்முதல் விலையை உயர்த்தியபோது, மாநில அரசும் விற்பனை விலையை உயர்த்தி ஒரு வாரத்துக்குள் அரசாணை வெளியிட்டது. அந்த ஒரு வாரத்தில் ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் உடனடியாக வழங்கப்பட்டது.

ஆனால், இந்த முறை கொள்முதல் விலையை மத்திய அரசு உயர்த்தி ஒரு மாதத்துக்கு மேலாகியும், விற்பனை விலையை மாற்றம் செய்வது தொடர்பாகவும், ஒரு மாத காலமாக டீலர்கள் விநியோகம் செய்த மண்ணெண்ணெய்க்கான இழப்பீட்டுத் தொகையை வழங்குவது தொடர்பாகவும் மாநில அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.    

இது குறித்து உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத் துறை உயரதிகாரிகள் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர்களிடம் டீலர்கள் முறையிட்டும் இதுவரை உரிய தீர்வு எட்டப்படவில்லை.

பொருளாதார இழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், செப்டம்பர் மாதம் முதல் பொது விநியோகத் திட்டத்துக்கு மண்ணெண்ணெய் விநியோகம் செய்வதை நிறுத்த டீலர்கள் முடிவு செய்துள்ளனர்.

அவ்வாறு நிறுத்தப்பட்டால் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும். அதற்கு முன்னர் மாநில அரசு இப்பிரச்னையில் தலையிட்டு தீர்வு காண வேண்டியது அவசியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com