தமிழகத்தில் 4000 சத்துணவு மையங்களை மூட அரசு முடிவு!

ஈரோடு, பிப்.16: தமிழகத்தில் 4,000 சத்துணவு மையங்களை மூட அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக ஈரோடு மாவட்டத்தில் 411 மையங்கள் மூடப்படுகின்றன. இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நிறைவு பெற்றுவிட்டன. ÷தமிழகத்
Updated on
2 min read

ஈரோடு, பிப்.16: தமிழகத்தில் 4,000 சத்துணவு மையங்களை மூட அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக ஈரோடு மாவட்டத்தில் 411 மையங்கள் மூடப்படுகின்றன. இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நிறைவு பெற்றுவிட்டன.

÷தமிழகத்தில் உள்ள தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரையிலான அரசுப் பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகளில் சுமார் 65000 சத்துணவு மையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் என சுமார் 1.23 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

÷சத்துணவு மையங்களில் 1 முதல் 10-ம் வகுப்பு பயிலும் 65 லட்சம் மாணவ, மாணவிகள் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர். இதற்காக சமூக நலத்துறை மூலம் உணவு மானியத் தொகை அளிக்கப்பட்டு வருகிறது.

÷ஒரு மாணவருக்கு காய்கறிக்கு 36 பைசா, அரிசி, பருப்பு, எண்ணெய், கொண்டைக்  கடலை இவற்றை வேகவைக்க 27 பைசா, மளிகைக்கு 17 பைசா ஒதுக்கப்படுகிறது.

கிராமப் பகுதியில் கூலி வேலைக்குச் செல்லும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு சத்துணவு மிகவும் உதவியாக இருந்து வருகிறது.

 இந்நிலையில், 25 மாணவ, மாணவிகளுக்கு கீழ் பயிலும் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களை மூடிவிட்டு, அருகில் உள்ள சத்துணவு மையங்களுடன் அவற்றை இணைத்துவிட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

÷அவ்வாறு மூடுவதற்கு முன்பு அந்தந்த மாவட்டத்தில் மூடப்படும் நிலையில் உள்ள சத்துணவு ஊழியர்களுக்கு கவுன்சலிங் நடத்தி, காலியாக இருக்கும் பிற சத்துணவு மையங்களில் அவர்களைப் பணியமர்த்த வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

 ஈரோடு மாவட்டத்தில் 25 மாணவ, மாணவிகளுக்கு கீழ் பயிலும் பள்ளிகளில் 411 சத்துணவு மையங்கள் இப்போது இயங்கி வருகின்றன. இங்கு பணியாற்றும் சத்துணவு ஊழியர்களுக்கு கடந்த வாரம் கவுன்சலிங் நடத்தப்பட்டு இடமாறுதல் பணியிடம் ஒதுக்கப்பட்டுவிட்டது.

 இதேபோல கோவையில் 600, திருப்பூரில் 250, திண்டுக்கல்லில் 800 உள்பட மாநிலம் முழுவதும் மாவட்டங்களில் மொத்தம் சுமார் 4,000 மையங்களை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் கவுன்சலிங் நடத்துவதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

 சத்துணவு ஊழியர்களை இடமாறுதல் செய்தாலும் அந்தந்த பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அவர்களது வளாகத்திலேயே சத்துணவு வழங்க ஏற்பாடு செய்யப்படும். அருகில் உள்ள சத்துணவு மையத்தில் இருந்து உணவு தயாரித்து அவற்றை எடுத்து வந்து பள்ளிகளில் வழங்க வேண்டும் என்றும் அரசு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

 இது குறித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பழனிச்சாமி கூறியது:

 கிராமப் பகுதியில் உள்ள குழந்தைகளின் பசியைப் போக்குவதில் சத்துணவு மையங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

அரசின் புதிய முடிவால் கிராமப் பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். பக்கத்து மையங்களில் இருந்து உணவை எடுத்துச் செல்வது சாத்தியமானது அல்ல. அவ்வாறு எடுத்துச் சென்றாலும் அதற்கான போக்குவரத்துச் செலவுக்கு யார் பொறுப்பு என்பது அந்த உத்தரவில் தெரிவிக்கப்படவில்லை. இந்த உத்தரவை அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

 இது குறித்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள உயர் அதிகாரியிடம் கேட்டபோது, சத்துணவு மையங்களை மூடுவது அரசு எடுத்துள்ள முடிவு. ஈரோடு மாவட்டத்தில் சத்துணவு ஊழியர்களுக்கு பாதிப்பு இல்லாமல் இருக்க மாற்று ஏற்பாடு செய்துள்ளோம். கவுன்சலிங்கில் பங்கேற்ற சத்துணவு ஊழியர்களுக்கு அவர்கள் ஏற்கெனவே பணியாற்றிய இடங்களுக்கு அருகே உள்ள மையங்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com