உதகை, மே 7: கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், உதகையில் கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது.
கோடை சுற்றுலா என்றாலே பெரும்பாலானவர்களின் நினைவுக்கு முதலில் வருவது உதகை. கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்கவும், விடுமுறை நாட்களை குளுமையாக கழிக்கவும் பெரும்பாலானோர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகைக்குதான் வருகின்றனர். ஆனால், உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இட வசதி உள்ளதா? என்பது ஆண்டுதோறும் கேள்விக்குறியாகவே உள்ளது.
உதகைக்கு ஆண்டுதோறும் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டில் சுமார் 25 லட்சம் சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்துள்ளனர். உதகையில் உள்ள அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுமார் 2.65 லட்சம் சுற்றுலாப் பயணிகளும், மே மாதத்தில் 6.5 லட்சம் சுற்றுலாப் பயணிகளும் வருகை புரிந்துள்ளனர்.
நடப்பாண்டில், ஏப்ரல் மாதத்தில் 2.58 லட்சம் பேரும், மே மாதத்தில் கடந்த 6 நாட்களில் மட்டும் சுமார் 90,000 பேரும் வந்துள்ளனர். உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் வாகனங்களிலேயே வந்து செல்கின்றனர்.
உதகையில் நடைபெறும் முக்கிய விழாக்களில் பங்கேற்கும் அரசுத் துறையிலான உயர் அலுவலர்கள் முதல் அமைச்சர்கள் வரை அனைவருமே பார்கிங் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்ற உறுதியை அளிக்கின்றனர். ஆனால், கோடை முடிந்ததும் இதை மறந்து விடுகின்றனர்.
நகருக்குள் வாகனங்களை நிறுத்திக்கொள்ள கோடப்பமந்து கால்வாய் மீது தளம் அமைத்து நிறுத்தலாம் என பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், இக்கால்வாயில் தண்ணீர் அதிக அளவில் வெளியேற வேண்டிய சூழலில், கால்வாய்க்குள் அடைப்பு ஏற்பட்டால் அந்த தண்ணீர் நகருக்குள் புகுந்துவிடும் எனக் கூறி பொதுப்பணித்துறையினர் அனுமதி மறுத்து வருகின்றனர்.
ஆனால், கால்வாயின் மேற்பரப்பு முழுதும் மூடப்படாமல் குறிப்பிட்ட தூரத்துக்கு தளமும், அதைத் தொடர்ந்து சிறிது இடைவெளியுமாக அமைத்தால் வாகனங்களை நிறுத்துவதிலும், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டால் அதை சீரமைப்பதிலும் இடையூறு ஏற்படாது என, நகராட்சி சார்பில் வழங்கப்பட்ட அறிக்கையில் பரிசீலிக்கப்படாமல் உள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும், வாகனங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துவரும் சூழலில், இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என்பதே உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
மக்கள் அவதி
நகருக்குள் பெரிய வாகனங்கள் நுழையக்கூடாது என்ற உத்தரவு காரணமாக, சுற்றுலாப் பேருந்துகளிலும், பெரிய வாகனங்களிலும் வருபவர்கள், குறைந்தது 2 கி.மீ. தொலைவுக்கு வெளியிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு, பின்னர் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்வதற்குள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
இதில் குழந்தைகளோடும், வயதானவர்களோடும் வருபவர்கள் படும் அவஸ்தை விவரிக்க இயலாததாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.