நிழலி கவுண்டம்பாளையத்தில் மூடிக்கிடக்குது கொப்பரை கொள்முதல் நிலையம்!

   காங்கயம்.ஏப்.16: காங்கயம் நிழலி கவுண்டம்பாளையத்தில் மூடப்பட்டுள்ள கொப்பரை கொள்முதல் நிலையம் மீண்டும் செயல்படத் துவங்க வேண்டும், என அப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  காங்கயம் தாலுகா, எல

 காங்கயம்.ஏப்.16: காங்கயம் நிழலி கவுண்டம்பாளையத்தில் மூடப்பட்டுள்ள கொப்பரை கொள்முதல் நிலையம் மீண்டும் செயல்படத் துவங்க வேண்டும், என அப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 காங்கயம் தாலுகா, எல்லப்பாளையம்புதூர் ஊராட்சி, நிழலி கவுண்டம்பாளையம் கிராமத்தில் வேளாண் விற்பனை மையம் உள்ளது. வேளாண் பொருட்களை கொள்முதல் செய்து,பாதுகாத்து வைப்பதற்கு வசதியாக சேமிப்புக் கிடங்கும், உலர் களமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனைக் கூடத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது.

 இந்த மையத்தைச் சுற்றியுள்ள கொடுவாய், குண்டடம், வஞ்சிபாளையம், எல்லப்பாளையம்புதூர்,ஜோதியம்பட்டி,பங்காம்பாளையம்,வட சின்னாரிபாளையம், செங்கோடம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் கொள்முதல் நிலையத்தில் கொப்பரையை விற்பனை செய்து வந்தனர்.

 இந்நிலையில், கொப்பரை விலை ஏற்றமடைந்தபோது இப் பகுதி தென்னை விவசாயிகள் கொள்முதல் நிலையத்தில் விற்காமல் கொப்பரையை வெளி சந்தையில் விற்பனை செய்தனர்.

 இரு மாதங்களாக இதே நிலை நீடித்தது. அதன் காரணமாக நிலையத்தில் கொப்பரை கொள்முதல் செய்யப்படுவது நிறுத்தப்பட்டதாக நிழலி கவுண்டம்பாளையம் பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

 தற்போது நிழலி கவுண்டம்பாளையத்தில் உள்ள கொப்பரை கொள்முதல் நிலையம் பயன்பாடின்றி வீணாகி வருகிறது. சேமிப்புக் கிடங்கு சிதிலமடைந்து காணப்படுகிறது. ஆங்காங்கே புற்கள் முளைத்து, கொள்முதல் நிலைய கட்டடம் கேட்பாரற்று கிடக்கிறது.

 இதுகுறித்து, அப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் பிஏபி பாசன சங்கத் தலைவர் கே.ஏ.ஜெகநாதன் கூறியது:

 கடந்த ஓராண்டாகவே கொப்பரை கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால் தென்னை விவசாயிகள், தங்களுக்கு உரிய விலை கிடைக்காமல் கஷ்டப்படுகின்றனர். நிலையம் மூடப்பட்டதால்,வேறு வழியில்லாமல் இப்பகுதி தென்னை விவசாயிகள் கொப்பரையை வெளி சந்தையில் விற்று வருகின்றனர்.

 மேலும்,கடந்த மார்ச்சில் காங்கயத்தில் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் கொப்பரை கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டது. அதனால், நிழலி கவுண்டம்பாளையத்தில் கொப்பரை கொள்முதல் செய்யப்படாது, எனக் கூறப்படுகிறது. உண்மை நிலவரம் என்னவென்று தெரியவில்லை.

 காங்கயம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டாலும், எங்கள் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள விற்பனைக் கூடத்திலும் கொப்பரை கொள்முதல் செய்யப்பட வேண்டும், என்றார்.

 விவசாயிகளுக்கு பயன்படாமல் மூடிக் கிடக்கும் நிழலி கவுண்டம்பாளையம் கொப்பரை கொள்முதல் நிலையம் மீண்டும் செயல்பட வேண்டும் என்பதே இப் பகுதி விவசாயிகளின் கோரிக்கை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com