கோவை, பிப். 9: கோவையில் இருந்து திருச்செந்தூருக்கு இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என்று கோவை நாடார் சங்கம் கோரியுள்ளது.
கோவையில் அண்மையில் நடைபெற்ற சங்கத்தின் பொதுக் குழுவில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்கத் தலைவர் சூலூர் டி.ஆர்.சந்திரசேகர் தலைமை வகித்தார். பொதுச் செயலர் ஜி.இருதயராஜா, பொருளாளர் ஆர்.எஸ்.கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கோவை- பொள்ளாச்சி- திண்டுக்கல் அகல ரயில் பாதை பணிக்குத் தேவையான நிதியை ஒதுக்கி, அத் திட்டத்தை விரைவில் முடிக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை நகரின் முக்கியச் சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், விபத்துகளைக் குறைக்கவும் உடனடியாக புதிய மேம்பாலங்கள் கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடார் சமூகத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். தீங்கு இல்லாத சுத்தமான கள்ளை மதுபான பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.
பொதுத் தேர்வுகள் நெருங்கி வருவதால் இரவு நேரத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். கோவை- மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். கூடங்குளம் அணு மின் நிலையம் குறித்த மக்களின் அச்சத்தைப் போக்கி, அங்கு மின் உற்பத்தியைத் தொடங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.