புற்றுநோய்களைத் தடுக்க எண்டோஸ்கோபி பரிசோதனை அவசியம்

 கோவை, மே 4: வயிறு தொடர்பான புற்றுநோயைத் தடுக்க எண்டோஸ்கோபி பிரசோதனை மேற்கொள்வது அவசியம் என்று ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர் சி.பழனிவேல் தெரிவித்தார்.  ஜெம் மருத்துவமனை சார்பில் எண்டோஸ்கோபி சிகிச்சை

 கோவை, மே 4: வயிறு தொடர்பான புற்றுநோயைத் தடுக்க எண்டோஸ்கோபி பிரசோதனை மேற்கொள்வது அவசியம் என்று ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர் சி.பழனிவேல் தெரிவித்தார்.

 ஜெம் மருத்துவமனை சார்பில் எண்டோஸ்கோபி சிகிச்சை குறித்து "ஜெம் ஸ்கோப்-2012' என்ற தலைப்பில் 3 நாள் சர்வதேசக் கருத்தரங்கம், கோவையில் வியாழக்கிழமை தொடங்கியது.

 இதன் தொடர்சியாக, கோவை, ராமநாதபுரத்தில் உள்ள ஜெம் மருத்துவமனையில் தொடங்கப்பட்ட நவீன குடல் உள்நோக்கு எண்டோஸ்கோபி சிகிச்சை மையத்தை, மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

 முன்னதாக ஜெம் மருத்துவமனை தலைவரும், குடல் நோய் அறுவைச் சிகிச்சை நிபுணருமான டாக்டர் சி.பழனிவேலு செய்தியாளர்களிடம் கூறியது:

 வெளிநாடுகளில் அதிகம் காணப்பட்டு வந்த வயிறு தொடர்பான புற்றுநோயால் தற்போது இந்தியர்களும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். வாழ்க்கை முறை மாற்றம், உணவுப் பழக்கம், உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வயிறு தொடர்பான புற்றுநோய்கள் அதிகரிக்கின்றன.

 மலக்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், குடல் புற்றுநோய் உள்ளிட்ட வயிறு தொடர்பான புற்றுநோய்கள் பொதுவாகக் காணப்படுகின்றன. பசியின்மை, நெஞ்சு எரிச்சல், வயிற்று வலி, குடல் புண், சுறுசுறுப்பின்மை ஆகியவை வயிறு தொடர்பான புற்று நோய்களுக்கு பொதுவான அறிகுறிகள்.

 நவீன எண்டோஸ்கோபி சிகிச்சை முறையால் அமெரிக்கா, ஐரோப்பா, கிழக்கு ஆசிய நாடுகளில், இவ்வகையான நோய்கள் வரும் முன் பரிசோதித்து நோயில் இருந்து காத்துக் கொள்கின்றனர்.

 இதேபோல இந்தியாவிலும் வயிறு தொடர்பான குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய் குறித்து கண்டறிந்து நோய் வராமல் தடுக்க எண்டோஸ்கோபி பரிசோதனை மேற்கொள்வது அவசியமாகும்.

 கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எண்டோஸ்கோபி பரிசோதனை மூலம் கிடைக்கும் முடிவுகளில் துல்லியமான தகவல்கள் கிடைக்காது. அதேபோல பரிசோதனை மேற்கொள்வதிலும் பல்வேறு சிரமங்கள் இருந்து வந்தன.

 தற்போது நவீன தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட எண்டோஸ்கோபி கருவிகள், உயர் தொழில்நுட்பம் கொண்ட கேமிரா கருவிகள் ஆகியவற்றின் மூலம் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள், குடல் அடைப்பு, பித்தநாள மற்றும் கணையக் கற்கள், ரத்தக்கசிவு, நீர்க்கட்டிகள், சிறுசிறு குடல் கட்டிகள் ஆகியவற்றை எளிதாகக் கண்டறிய முடியும்.

 இதைத் துல்லியமாகக் கண்டறிந்து ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிப்பதன் மூலம் நோயைக் குணப்படுத்த முடியும். இந்த நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து கருத்தரங்கம் மூலம் டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.

 தென் கொரியாவைச் சேர்ந்த டாக்டர் ஜிம் ஹாங் கிம், ஜப்பானைச் சேர்ந்த டாக்டர் சூசுகி ஹருகுசா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டாக்டர் டேவிட் டிவோன்சயர், டாக்டர் சியாம் வரதராஜுலு, கருத்தரங்க செயலாளர் டாக்டர் பி.எஸ்.ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com