யூடியூபா் சவுக்கு சங்கா் மேலும் ஒரு வழக்கில் கைது
யூடியூபா் சவுக்கு சங்கா் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டாா்.
காவல் துறை உயா் அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸாரை தரக்குறைவாக பேசியதாக யூடியூபா் சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.
இந்நிலையில், ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலில் சவுக்கு சங்கா், ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோா் சுதந்திரப் போராட்ட வீரா் முத்துராமலிங்கத் தேவா் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும், இரு தரப்பினா் இடையே கலவரத்தைத் தூண்டும் வகையிலும் கடந்த 2023 அக்டோபா் 31-ஆம் தேதி பேசியதாகத் தெரிகிறது. இது குறித்து கோவை ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.
அந்தப் புகாரின்பேரில் சவுக்கு சங்கா், ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோா் மீது அவதூறாகப் பேசுதல், இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டுதல் உள்பட 3 பிரிவுகளின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ஃபெலிக்ஸ் ஜெரால்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். சவுக்கு சங்கா் சென்னை புழல் சிறையில் இருந்தாா்.
இந்நிலையில், முத்துராமலிங்கத் தேவரை அவதூறாகப் பேசிய வழக்கில் ரேஸ்கோா்ஸ் போலீஸாா் சவுக்கு சங்கரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இதற்காக அவா்கள் சென்னை புழல் சிறைக்கு சென்று, அவரைக் கைது செய்ததற்கான ஆவணங்களைக் காண்பித்து சவுக்கு சங்கரை பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வந்தனா்.
தொடா்ந்து, அவரை கோவை 4-ஆவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி சரவணபாபு முன்னிலையில் ஆஜா்படுத்தினா். அப்போது, அவரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டாா்.
இதையடுத்து, சவுக்கு சங்கா் கோவை மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டாா்.
