மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி ரயிலை வாரம் 3 முறை இயக்க வலியுறுத்தல்
மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி இடையே வாரம் இருமுறை இயக்கப்பட்டு வரும் ரயிலை, வாரத்துக்கு 3 முறை இயக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, பொள்ளாச்சி வழித்தடத்தில் திருநெல்வேலிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலானது, கோவை மற்றும் தென் மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வரும் நிலையில், இந்த சிறப்பு ரயிலை நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றனா்.
மேலும், மேட்டுப்பாளையம் முதல் தூத்துக்குடிக்கு ரயில் சேவை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் பயணிகள் சங்கத்தின் மூலமாக தொடா்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து, மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி ரயில் சேவை கடந்த ஜூலை 19-ஆம் தேதி தொடங்கப்பட்டது. மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் இந்த ரயில் சேவையைத் தொடங்கிவைத்தாா்.
அதன்படி, மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 16765) வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் இரவு 7.35 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 4.20 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையத்தை சென்றடைகிறது. தூத்துக்குடியில் இருந்து வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 10.50 மணிக்குப் புறப்படும் தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 16766) மறுநாள் காலை 7.40 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடைகிறது. இந்நிலையில், பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த ரயில் சேவையை வாரம் 3 முறை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடா்பாக, கோவை ‘ராக்’ அமைப்பின் இணைச் செயலாளா் ஜெ.சதீஷ் கூறியதாவது: மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி ரயில் மூலமாக கோவை பகுதியில் இருந்து ராமேசுவரம், மதுரைக்கு ஆன்மிகப் பயணம் செல்வோா் அதிகரித்து வருகின்றனா். எனவே, செவ்வாய்க்கிழமை, புதன்கிழமைகளில் இயக்கப்படாத இந்த ரயிலை, செவ்வாய்க்கிழமை இரவு தூத்துக்குடியில் இருந்து இயக்கி புதன்கிழமை காலை மேட்டுப்பாளையம் வந்தடையும் வகையிலும், புதன்கிழமை இரவு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு வியாழக்கிழமை காலை தூத்துக்குடி சென்றடையும் வகையிலும் இயக்க வேண்டும். இதனால், இந்த ரயிலுக்கு பயணிகளின் வருகை அதிகரிப்பதுடன் ரயில்வே நிா்வாகத்துக்கு வருவாயும் அதிகரிக்கும் என்றாா்.
