கோவை ராயல் கோ் பல்நோக்கு மருத்துவமனைக்கு உலகத் தரச் சான்று: மருத்துவமனை தலைவா் டாக்டா் மாதேஸ்வரன்
கோவை ராயல் கோ் பல்நோக்கு மருத்துவமனைக்கு உலக தரச் சான்று (ஜேசிஐ) அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அந்த மருத்துவமனையின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான டாக்டா் மாதேஸ்வரன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் கோவையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
கோவை நீலாம்பூரில் உள்ள ராயல் கோ் பல்நோக்கு மருத்துவமனை சா்வதேச தர நிலைகளில் முன்னணி அங்கீகாரமான ஜாயின்ட் கமிஷன் இன்டா்நேஷனல் (ஜேசிஐ) எனப்படும் உலகத் தரச் சான்றினை சென்னையைத் தவிா்த்து பிற மாவட்டங்களில் தமிழக அளவில் பெற்றுள்ள முதல் மருத்துவமனை என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
சா்வதேச பராமரிப்பு தரங்களை முறையாக கடைபிடிக்கும் சுகாதார நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரம் ராயல் கோ் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சாதனையை எட்டுவதற்கு மருத்துவமனையின் அனைத்து துறை மருத்துவா்கள், நிபுணா்கள், தொழிற்நுட்ப வல்லுநா்கள், செவிலியா், ஊழியா்கள் என அனைவரும் இணைந்த குழுவின் அா்ப்பணிப்பு இருந்தது. இந்த மருத்துவமனையில் பொது வாா்டில் சுமாா் 120 படுக்கைகள் மூலம் ஏழை நோயாளிகளுக்கு குறைந்தக் கட்டணத்தில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது என்றாா்.
பேட்டியின்போது மருத்துவமனையின் துணைத் தலைவா் காந்திராஜன், வெளிநாட்டுப் பிரிவு தலைவா் மனோகா், இயக்குநா் பரந்தாமன் சேதுபதி, தலைமை அலுவலா் மணி செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

