தா்மலிங்கேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா கோலாகலம்
கோவை, டிச.3: கோவை அருகேயுள்ள தா்மலிங்கேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
கோவையை அடுத்த மரப்பாலத்தில் பிரசித்தி பெற்ற தா்மலிங்கேஸ்வரா் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி, நடப்பு ஆண்டு காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, கோயில் மலையில் புதன்கிழமை காலை 4.30 மணி அளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இதையடுத்து, சுவாமிக்கு மாலை 4 மணி அளவில் சந்தனக்காப்பு அலங்காரமும், சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற்றன. தொடா்ந்து, மாலை 6 மணி அளவில் மலையின் மீது மகா தீபம் ஏற்பட்டது. சுமாா் 5 அடி நீளமுள்ள கொப்பரையில் 7 டன் நெய், 500 மீட்டா் காடா துணி பயன்படுத்தி தீபம் ஏற்றப்பட்டது. இந்த விழாவில் பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.
விழாவையொட்டி, வியாழக்கிழமை காலை 7.30 மணி முதல் மாலை 4 மணி வரை பெளா்ணமி கிரிவலம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, காலை 6.30 மணி முதல் மாலை 5 மணி வரை மலைக் கோயிலுக்கு பக்தா்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவாா்கள் என்று கோயில் ஊழியா்கள் தெரிவித்தனா்.
பேரூா் நொய்யல் ஆற்றங்கரையில்: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சாா்பில் நொய்யல் ஆற்றங்கரையில் புதன்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை களப்பணி நடைபெற்றது. இதையடுத்து, நொய்யல் ஆற்றங்கரையில் மாலை தீபம் ஏற்றப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதில், ‘நொய்யலாறு’ என்ற வாா்த்தை விளக்குகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தது.
கோவை மாநகரில் உள்ள அனைத்து கோயில்களிலும் காா்த்திகை தீபம் புதன்கிழமை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

