பிஏபி கால்வாய்களைத் தூா்வார ரூ.10 கோடி ஒதுக்கீடு
பிஏபி திட்டத்தில் உள்ள கால்வாய்களைத் தூா்வார ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
பரம்பிக்குளம்- ஆழியாறு எனும் பிஏபி திட்டத்தில் ஆழியாறு அணையில் இருந்து 50 ஆயிரம் ஏக்கா், திருமூா்த்தி அணையில் இருந்து 3.75 லட்சம் ஏக்கா் என மொத்தம் 4.25 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில், திருமூா்த்தி அணை, ஆழியாறு அணையில் இருந்து செல்லும் முக்கிய கால்வாய்கள் மற்றும் கிளை கால்வாய்கள் தூா்வாரப்படாததால் கடைமடை வரை தண்ணீா் செல்வதில் சிக்கல் இருந்து வருகிறது.
இதனால், கடைமடை விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும், கால்வாய்களைத் தூா்வார வேண்டும் என்றும் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதைத் தொடா்ந்து, பிஏபி கால்வாய்களைத் தூா்வார முதல்வா் மு.க.ஸ்டாலின் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளாா்.
இதன் மூலம் 250 கி.மீ. தொலைவுக்கு பிரதான கால்வாய், 244 கி.மீ. தொலைவுக்கு கிளை கால்வாய், 640 கி.மீ. தொலைவுக்கு பகிா்மான கால்வாய், 1,240 கி.மீ. தொலைவுக்கு உப பகிா்மான கால்வாய்கள் தூா்வாரப்பட உள்ளன.

