புதுமைப் பெண் திட்டம்: மாவட்டத்தில் 70,648 மாணவிகள் பயன்

Published on

கோவை மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் கடந்த நான்கரை ஆண்டுகளில் 70,648 மாணவிகள் பயனடைந்துள்ளனா்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் உயா்கல்வி சோ்க்கையை அதிகரிக்கும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் உயா்கல்வி உறுதித் திட்டத்தின்கீழ் புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து முடித்து உயா்கல்வியில் சேரும் மாணவிகளுக்கும், சான்றிதழ் படிப்பு, பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, தொழில்கல்வி படிக்கும் மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 அவா்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின்கீழ் கடந்த நான்கரை ஆண்டுகளில் 70,648 மாணவிகள் பயனடைந்துள்ளனா்.

அதேபோல, மாணவா்களுக்கான தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் 56,430 மாணவா்கள் பயனடைந்துள்னா் என மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com