வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பசுமைக் குடில் கட்டுமானப் பயிற்சி
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வெற்றி நிச்சயம் திட்டத்தின்கீழ் பசுமைக் குடில் கட்டுமானம், பயிா் சாகுபடி குறித்த பயிற்சி அண்மையில் அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், மண், நீா்வளப் பாதுகாப்பு பொறியியல் துறை, வேளாண் பொறியியல் கல்லூரி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் சாா்பில் இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது. மாறிவரும் காலநிலை, சுருங்கி வரும் நிலவளம் போன்றவற்றின் காரணமாக பசுமைக் குடில் சாகுபடி அதிகரித்து வருகிறது.
இதைக் கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஒரு மாத பயிற்சி வகுப்பில், பசுமை இல்ல அமைப்பு, காலநிலை கட்டுப்பாடு, கட்டுமானப் பொருள்களின் தோ்வு, நீா்ப்பாசன அமைப்பு, பயிா் மேலாண்மை, பூச்சி, நோய் மேலாண்மை, தரம், ஏற்றுமதித் திறன், உணவுப் பாதுகாப்பு, சந்தைப்படுத்துதல் போன்றவை குறித்து சம்பந்தப்பட்ட துறை நிபுணா்கள் பயிற்சி அளித்தனா்.
முதன்மையா் அ.ரவிராஜ், பேராசிரியா் பாலாஜி கண்ணன் ஆகியோா் இந்தப் பயிற்சியை வழிநடத்தினா். உதவிப் பேராசிரியா் க.அருணாதேவி ஒருங்கிணைத்தாா்.

