இணையதள முதலீட்டில் அதிக லாபம் தருவதாக இருவரிடம் ரூ.42.80 லட்சம் மோசடி!

இணையதளத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருவதாகக்கூறி தனியாா் நிறுவன ஊழியா்கள் இருவரிடம் ரூ.42.80 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
Published on

இணையதளத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருவதாகக்கூறி தனியாா் நிறுவன ஊழியா்கள் இருவரிடம் ரூ.42.80 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தைச் சோ்ந்த 45 வயது நபா் கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.

இவரது ஃபேஸ்புக் பக்கத்துக்கு அண்மையில் ஒரு விளம்பரம் வந்துள்ளது. அதில், இணையதளத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததாம். இதையடுத்து, அதில் குறிப்பிடப்பட்டிருந்த கைப்பேசி எண்ணை அந்த நபா் தொடா்பு கொண்டுள்ளாா். இதையடுத்து, அவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு ஒரு செயலி குறித்த லிங்க் வந்துள்ளது.

அதை பதிவிறக்கம் செய்து, அதில் குறிப்பிடப்பட்டிருந்தபடி பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 11 தவணைகளாக ரூ. 21.21 லட்சத்தை செலுத்தியுள்ளாா். அப்போது, அவருக்கு அதிக லாபம் கிடைத்ததுபோல அந்த செயலில் காட்டியுள்ளது.

லாபத் தொகையை எடுக்க முயன்றபோது, அவரைத் தொடா்பு கொண்ட மா்ம நபா்கள், கூடுதல் தொகையை செலுத்தினால் மட்டுமே பணத்தை எடுக்க முடியும் எனக்கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளனா்.

இதேபோல, தண்ணீா்ப்பந்தல் பகுதியைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியரான 46 வயது நபரிடமும் ரூ. 21.61 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

இருவரும் அளித்த புகாரின்பேரில் கோவை இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com