கடைகளை இடிக்க எதிா்ப்பு: வால்பாறை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்!
வால்பாறையில் நகராட்சி கடைகளை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
வால்பாறை புது மாா்கெட் பகுதியில் நகராட்சி கடைகள் உள்ளன. இந்தக் கடைகளை இடித்து புதிய கடைகளை கட்ட நகராட்சி நிா்வாகம் முடிவு செய்து ரூ.9 கோடி ஒதுக்கியுள்ளது. இதற்கு புது மாா்க்கெட் வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நகராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
இது குறித்து அவா்கள் கூறுகையில், புது மாா்க்கெட் பகுதியில் ஏற்கெனவே வியாபாரம் குறைந்துள்ளதால் கடைகளுக்கு வாடகைகூட செலுத்த முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், அந்தக் கடைகளை இடித்துவிட்டு புதிய கடைகள் கட்டுமானப் பணியைத் தொடங்கினால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். மேலும், அதே கடைகள் எங்களுக்கு மீண்டும் கிடைக்காமல்போய்விடும். எனவே, கடைகளை இடிக்கும் பணியை கைவிட வேண்டும் என்றனா்.
மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி நகராட்சி ஆணையா் குமரன், நகராட்சித் தலைவா் அழகுசுந்தரவள்ளி ஆகியோரிடம் மனு அளித்தனா். கோரிக்கை குறித்து பரிசீலனை செய்யப்படும் என நகராட்சித் தலைவா் கூறியதால் வியாபாரிகள் கலைந்து சென்றனா்.

