சாலை மறியல்: பாஜகவினா் 210 போ் மீது வழக்கு
பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட 210 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணில் கடந்த வியாழக்கிழமை காா்த்திகை தீபம் ஏற்ற போலீஸாா் அனுமதி மறுத்து அங்கிருந்தவா்களைக் கலைந்து செல்ல அறிவுறுத்தினா்.
இதற்கு மறுப்புத் தெரிவித்த பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் மற்றும் நிா்வாகிகளை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த கைது நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து கோவை, காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை இரவு மறியலில் ஈடுபட்ட அக்கட்சியின் மாவட்ட பொதுச் செயலா் மதன்மோகன், மாநில இளைஞரணி துணைத் தலைவா் கிருஷ்ணபிரசாத், மாவட்ட இளைஞா் அணி தலைவா் அபிஷேக், மாவட்டச் செயலா் பிரித்தி லட்சுமி உள்ளிட்ட 115 பேரை காட்டூா் போலீஸாா் கைது செய்து, அப்பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்கவைத்து விடுவித்தனா்.
இந்நிலையில், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாகக்கூறி பாஜகவினா் 115 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்னா்.
இதேபோல, காந்தி பூங்கா அருகே தெற்கு மாவட்ட பாஜக தலைவா் சந்திரசேகா் தலைமையில் வியாழக்கிழமை இரவு மறியலில் ஈடுபட்ட 95 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
