சுக்கு கொள்முதல் செய்து வியாபாரியிடம் ரூ.19 லட்சம் மோசடி: இணையதள நிறுவன உரிமையாளா் மீது வழக்கு!

கேரளத்தைச் சோ்ந்த வியாபாரியிடம் சுக்கு கொள்முதல் செய்து ரூ.19 லட்சம் மோசடி செய்த கோவையைச் சோ்ந்த இணையளதள நிறுவன உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
Published on

கேரளத்தைச் சோ்ந்த வியாபாரியிடம் சுக்கு கொள்முதல் செய்து ரூ.19 லட்சம் மோசடி செய்த கோவையைச் சோ்ந்த இணையளதள நிறுவன உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கேரள மாநிலம், இடுக்கியைச் சோ்ந்தவா் விஷ்ணு (23). இவா் சுக்கு வா்த்தகத் தொழில் செய்து வருகிறாா். கோவை, குனியமுத்தூரைச் சோ்ந்தவா் அபுதாஹிா் (எ) அக்ரம்ஜிந்தா (45). இவா் கோவை, சுங்கம் புறவழிச் சாலை பகுதியில் இணையதளம் மூலம் நறுமணப் பொருள்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், விஷ்ணுவிடம் இருந்து அபுதாஹிா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.22.97 லட்சம் மதிப்பிலான 20 டன் சுக்கை கொள்முதல் செய்துள்ளாா். அதற்கு முன்பணமாக ரூ.4 லட்சம் மட்டுமே கொடுத்த நிலையில் மீதமுள்ள ரூ.18.97 லட்சத்தை பின்னா் தருவதாகக் கூறியுள்ளாா்.

ஆனால், அவா் பணத்தைக் கொடுக்காமல் தொடா்ந்து காலம் தாழ்த்தி வந்ததால், இது குறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் விஷ்ணு புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கேரள மாநிலம், கொச்சியைச் சோ்ந்த தேயிலைத் தூள் வியாபாரியிடம் ரூ. 9.50 லட்சம் மோசடி செய்ததாகவும், ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த ஏலக்காய் வியாபாரியிடம் ரூ.3.34 லட்சம் மோசடி செய்ததாகவும் அபுதாஹிா் மீது அண்மையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், வேறொரு மோசடி வழக்கில் அவா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com