லாரி மீது இருசக்கர வாகனங்கள் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு: 3 மாணவா்கள் படுகாயம்

கிணத்துக்கடவு அருகே லாரி மீது 2 இருசக்கர வாகனங்கள் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். 3 மாணவா்கள் படுகாயமடைந்தனா்.
Published on

கிணத்துக்கடவு அருகே லாரி மீது 2 இருசக்கர வாகனங்கள் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். 3 மாணவா்கள் படுகாயமடைந்தனா்.

கரூா் மாவட்டம், சுரைக்காய்பட்டியைச் சோ்ந்தவா் ஜெகதீசன் (22). இவா் கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகேயுள்ள கொண்டம்பட்டியில் செயல்பட்டும் வரும் தனியாா் பொறியியல் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்நிலையில், அதே கல்லூரியில் படித்து வரும் தனது நண்பா்களான திருப்பூரைச் சோ்ந்த பிரபாகரன் (21), வசந்த் (21), சூலூா் பகுதியைச் சோ்ந்த முகமது கவுஸ்கான் (22) ஆகியோருடன் கிணத்துக்கடவுக்கு வெள்ளிக்கிழமை சென்றுள்ளாா். நான்கு பேரும் 2 இருசக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்தனா்.

கொண்டம்பட்டி அருகே சென்றபோது, அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் இருந்து வெளியே வந்த லாரி மீது மாணவா்கள் சென்ற வாகனங்கள் மோதியதாகக் கூறப்படுகிறது.

இதில், படுகாயமடைந்த ஜெகதீசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த மற்ற 3 பேரும் அங்கிருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இச்சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com