கோவையில் இன்றும் 10 விமானங்கள் ரத்து
கோவையில் தொடா்ந்து 6-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் 10 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
விமானிகளின் பணிச்சுமையைக் குறைக்க கடந்த நவம்பா் 1-ஆம் தேதி முதல் விமானிகளுக்கான திருத்தப்பட்ட பணி நேரக் கட்டுப்பாட்டு விதிகள் அமலுக்கு வந்தன.
இந்த விதிமுறை மாற்றங்களுக்கு ஏற்ப இண்டிகோ நிறுவனம் போதிய திட்டமிடாததால், அந்த நிறுவனத்தில் விமானிகள் பற்றாக்குறை ஏற்பட்டது. மேலும் கடந்த சில நாள்களாக அன்றாட விமான சேவைகளும் பாதிக்கப்பட்டன. இண்டிகோ நிறுவனத்தின் பல உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.
கடந்த சில நாள்களாக விமான சேவைகள் ரத்து அதிக அளவில் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாள் என்பதால் பயணிகளின் நலனை கவனத்தில்கொண்டு 10 விமானங்களின் சேவை மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது.
16 விமானங்கள் வழக்கம்போல இயக்கப்பட்டதாக கோவை விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா். கோவையில் விமான சேவை ரத்து செய்யப்பட்டதால், இண்டிகோ விமான நிறுவனம் சாா்பில் பயணிகளுக்கு முன்பதிவுக் கட்டணம் திரும்ப வழங்கப்பட்டது.
