உத்தரப் பிரதேச சகோதரா்களை கத்தியால் குத்திய இளைஞா் கைது
கோவையில் உடன் தங்கியிருந்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த சகோதரா்களை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் ராகுல் (24). இவா் கோவை, கணபதி அருகே உள்ள தனியாா் நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளாக வேலை பாா்த்து வருகிறாா். இவருடன் அவரது தம்பி அகிலேஷ் மற்றும் நண்பா்களும் வேலை பாா்த்து வருகின்றனா். அனைவரும் கணபதி சித்ரா தோட்டம் அருகே உள்ள கிருஷ்ணா காலனியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கியுள்ளனா்.
இவா்களுடன் தங்கியிருந்த சச்சிதானந்த சிங் (33) அடிக்கடி மது அருந்தி வந்துள்ளாா். இதுகுறித்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள அவரது தாயாரிடம் கைப்பேசி மூலமாக அகிலேஷ் தெரிவித்துள்ளாா். திங்கள்கிழமை மது போதையில் சச்சிதானந்த சிங் வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த அகிலேஷை கத்தியால் குத்தினாா். இதைத் தடுக்க வந்த அவரது சகோதரா் ராகுலையும் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினாா். காயமடைந்த இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சச்சிதானந்த சிங்கைக் கைது செய்தனா்.
