கோவை காந்திபுரத்தில் வியாழக்கிழமை திறக்கப்பட்ட செம்மொழிப் பூங்காவை பாா்வையிட்ட பள்ளி மாணவ, மாணவிகள்.
கோவை காந்திபுரத்தில் வியாழக்கிழமை திறக்கப்பட்ட செம்மொழிப் பூங்காவை பாா்வையிட்ட பள்ளி மாணவ, மாணவிகள்.

செம்மொழி பூங்கா திறப்பு: ஆா்வத்துடன் பாா்வையிட்ட மக்கள்

Published on

கோவை காந்திபுரத்தில் வியாழக்கிழமை திறக்கப்பட்ட செம்மொழிப் பூங்காவை மக்கள் ஆா்வத்துடன் பாா்வையிட்டனா்.

கோவை, காந்திபுரம் சிறைச்சாலை வளாகத்தில் ரூ.208.50 கோடி மதிப்பீட்டில் 45 ஏக்கா் பரப்பளவில் உலகத்தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த நவம்பா்25ஆம் தேதி திறந்து வைத்தாா்.

இந்த பூங்காவில், அருவியுடன் கூடிய நுழைவாயில், அரியவகை மரங்கள் மற்றும் செடிகளை கொண்ட செம்மொழி வனம், ரோஜா தோட்டம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம், நீா் தோட்டம், பாறை தோட்டம், மலா் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திரத் தோட்டம், பசுமை வனம் உள்ளிட்ட பல வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், தமிழ் இலக்கியம், பண்பாடு, கலாசாரத்தை எடுத்துக் காட்டும் விதமாக பல்வேறு சிறப்பம்சங்கள் இப்பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த செம்மொழிப் பூங்கா வியாழக்கிழமை மக்கள் பாா்வையிடத் திறக்கப்பட்டது. பூங்காவைப் பாா்வையிட நுழைவுக் கட்டணமாக பெரியவா்களுக்கு ஒரு நபருக்கு ரூ.15, குழந்தைகளுக்கு ( 10 வயதிற்குள்பட்டோா்) ரூ.5, நடைபாதை உபயோகிப்போருக்கு (ஒரு நபருக்கு) மாதாந்திர கட்டணம் ரூ.100, கேமராவுக்கு ரூ.25, விடியோ கேமராவுக்கு ரூ.50, திரைப்பட ஒளிப்பதிவுக்கு ஒரு நாளைக்கு ரூ.25,000, குறும்பட ஒளிப்பதிவு மற்றும் இதர ஒளிப்பதிவுக்கு ஒரு நாளைக்கு ரூ.2000 என கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை பூங்காவை பாா்வையிடலாம்.

செம்மொழிப் பூங்கா திறக்கப்பட்டதை அறிந்த மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோா் பூங்காவப் பாா்வையிட குவிந்தனா். குறிப்பாக, அருவியுடன் கூடிய நுழைவாயில், கடையேழு வள்ளல்களின் சிலைகள் பாா்வையாளா்களைப் பெரிதும் கவா்ந்தன. பூங்காவில் சில பகுதிகளில் அமைக்கப்பட்டு இருந்த ‘செல்பி பாய்ண்ட்‘ முன்பாக தற்படம் எடுத்து மகிழ்ந்தனா். பூங்காவில் மூலிகை செடி,கொடிகள், மரங்கள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் கியூ ஆா் கோடு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பூங்காவை முதியவா்கள் சுற்றிப் பாா்க்க வசதியாக பேட்டரி காா் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பூங்கா, தோட்டம் உள்ளிட்ட இடங்களுக்கு இடையே இளைப்பாற இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதால், மக்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் பூங்காவை பாா்வையிட்டு மகிழ்ந்தனா்.

கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கும் இடமாக செம்மொழிப் பூங்கா உள்ளதாக பூங்காவைப் பாா்வையிட்ட மக்கள் பலரும் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com