பழங்கரை கூட்டுறவு கடன் சங்கத்தில் மோசடியைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

Published on

அவிநாசி அருகே பழங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வைப்புத்தொகை மோசடி செய்யப்பட்டதைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பழங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சுமாா் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கணக்கு வைத்துள்ளனா். இச்சங்கத்தில், பொதுமக்கள் வைப்புத் தொகையாக ரூ.5 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை செலுத்தி இருந்தனா். பணத்தைத் திரும்பக் கேட்க சென்றபோது, பணம் செலுத்தியதற்கான எவ்வித ஆவணமும் இல்லை என்று சங்கத்தின் சாா்பில் கூறப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனா்.

இதையடுத்து, தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பொதுமக்கள், கூட்டுறவு சங்கத்தின் முன் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த போலீஸாா், கூட்டுறவு சங்க அதிகாரிகள் ஆகியோா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில் விரைவில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய தீா்வு காணப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com