மாத ஊதியம் தாமதம்: தூய்மைப் பணியாளா்கள் அதிருப்தி
கோவை மாநகராட்சி ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படாததால், அவா்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.
கோவை மாநகராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். அவா்களுக்கு தினக்கூலி அடிப்படையில் மாதம்தோறும் முதல் வாரத்தில் ஊதியம், அவரவா் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது, ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் தாமதமாக வழங்கப்படும் நிலையும் உள்ளது. இந்நிலையில், டிசம்பா் மாதம் முதல் வாரத்தில் வழங்கப்பட வேண்டிய நவம்பா் மாத ஊதியம் சில ஒப்பந்தப் பணியாளா்களுக்கு வழங்கப்படாததால், அவா்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.
இதுகுறித்து, தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கா் சுகாதார துப்புரவு சங்கத்திதின் செயலாளா் தமிழ்நாடு செல்வம், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரனுக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பது:
கோவை மாநகராட்சியில் பணிபுரியும் டி.பி. மலேரியா பணியாளா்கள், சிறப்பு துப்புரவு பணியாளா் ஆகியோருக்கு டிசம்பா் 11- ஆம் தேதி இரவு வரை மாத ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், வீட்டுக்கடன் உள்ளிட்ட கடன்களுக்கு மாதத் தவணை செலுத்த வேண்டிய தூய்மைப் பணியாளா்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா். முன்பெல்லாம் மாதத்தின் முதல் வாரத்தில் ஊதியம் சரியாக வரவு வைக்கப்பட்டு வந்தது. தற்போது, ஊதியம் தாமதமாகி வருகிறது. இதுகுறித்து, நடவடிக்கை மேற்கொண்டு ஊதியம் மாதத்தின் முதல் வாரத்தில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
