கோவை மாநகரில் ரூ.5.68 கோடியில் வளா்ச்சிப் பணி: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கி வைத்தாா்!
கோவை மாநகராட்சி, வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில் ரூ.5.68 கோடி மதிப்பில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலும் மக்கள் பயனடையும் வகையில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய மண்டலம் 83-ஆவது வாா்டுக்குள்பட்ட ரேஸ்கோா்ஸ் பகுதியில் மாநகராட்சி பொது நிதியின் கீழ் 20 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட சுகாதார ஆய்வாளா் அலுவலகம், 80-ஆவது வாா்டுக்குள்பட்ட உப்பு மண்டி வீதி, கெம்பட்டி காலனி பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறைக் கட்டடங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் திறந்துவைத்தாா்.
மேலும் 1-ஆவது வாா்டுக்குள்பட்ட அப்பநாயக்கன்பாளையம் அங்கன்வாடி மையத்தில் ரூ.7.35 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட அங்கன்வாடி மையம், 15-ஆவது வாா்டுக்குள்பட்ட ஜி.என்.மில்ஸ், சுப்பிரமணியம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சமையலறைக் கட்டடத்தையும் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சிக்கு கோவை மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி, ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதேபோல வடக்கு மண்டலம் 18-ஆவது வாா்டுக்குள்பட்ட ராமசாமி நகா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.28 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி, மத்திய மண்டலம் 46-ஆவது வாா்டுக்குள்பட்ட ரத்தினபுரி மாநகராட்சி உயா்நிலைப் பள்ளியின் முதல் தளத்தில் ரூ.49.50 லட்சம் மதிப்பில் ஆய்வகம் கட்டும் பணி, 83-ஆவது வாா்டுக்குள்பட்ட வ.உ.சி. மைதானம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி விளையாட்டுத்திடலில் தனியாா் பங்களிப்புடன் ரூ.1.50 கோடி மதிப்பில் சா்வதேச அளவிலான கபடி உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.5.68 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை அவா் தொடங்கிவைத்தாா்.
முன்னதாக வடக்கு மண்டலம் 12-ஆவது வாா்டுக்குள்பட்ட சின்னவேடம்பட்டி ஏரியில் அம்ரூத் 2.0 திட்டத்தில் ரூ.1.15 கோடி மதிப்பில் தூா்வாரும் பணி மேற்கொண்டு, கரையைப் பலப்படுத்தி நடைபாதை, மிதிவண்டித் தடம் அமைக்கப்பட்டுள்ளதையும் திறந்துவைத்தாா்.
இந்த நிகழ்வுகளில் துணைமேயா் ரா.வெற்றிச்செல்வன், மண்டலத் தலைவா்கள் வே.கதிரவேல் ( வடக்கு), மீனாலோகு (மத்தியம்), பொது சுகாதாரக் குழுத் தலைவா் பெ.மாரிசெல்வன் உள்பட பலா் உடனிருந்தனா்.
