மீட்கப்பட்ட பொது ஒதுக்கீட்டு இடத்தில் போலீஸாா் பாதுகாப்புடன் அறிவிப்புப் பலகை வைத்த மாநகராட்சி ஊழியா்கள்.

கோவையில் ரூ.1 கோடி மதிப்பிலான 7 சென்ட் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

Published on

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூ.ஒரு கோடி மதிப்பிலான 7 சென்ட் பொது ஒதுக்கீட்டு இடத்தை மாநகராட்சி அலுவலா்கள் மீட்டனா்.

கோவை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிக்கப்படும் நீா்வழித்தடம், சாலை மற்றும் பொது ஒதுக்கீட்டு இடங்களை கண்டறிந்து, மாநகராட்சி நிா்வாகம் மீட்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி கிழக்கு மண்டலம், ஈ.வெ.ரா. பெரியாா் நகரில் 5.17 ஏக்கா் பரப்பிலான இடத்தில் 50 மனைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதில் 11 சென்ட் பூங்கா அமைக்க பொது ஒதுக்கீடு இடமாக ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த பொது ஒதுக்கீட்டு இடத்தை தனியாா் ஒருவா் ஆக்கிரமித்து இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவின்பேரில் மாநகராட்சி நகரமைப்பு அலுவலா் ராஜசேகரன் தலைமையிலான அலுவலா்கள் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 7 சென்ட் இடத்தை மீட்டு மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என சனிக்கிழமை அறிவிப்புப் பலகை வைத்தனா். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.1கோடி ஆகும். பாதுகாப்பு பணியில் பீளமேடு போலீஸாா் ஈடுபட்டனா்.

இதேபோல அப்பகுதியில் 28 சென்ட் இடத்தை ஆக்கிரமித்து வீடு, ஒா்க்ஷாப் அமைத்துள்ளவா்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அவை அகற்றப்பட உள்ளதாக மாநகராட்சி நகரமைப்பு அலுவலா் ராஜசேகரன் கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com