கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது இந்து வியாபாரிகள் நலச் சங்கத்தின் சாா்பில் வியாபாரிகள் மாநாட்டுக்கான அழைப்பிதழை வெளியிட்ட இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் உள்ளிட்டோா்.
கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது இந்து வியாபாரிகள் நலச் சங்கத்தின் சாா்பில் வியாபாரிகள் மாநாட்டுக்கான அழைப்பிதழை வெளியிட்ட இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் உள்ளிட்டோா்.

திருப்பரங்குன்றம் விவகாரம்: சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் வகையில் அரசு செயல்படுகிறது! - காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் குற்றச்சாட்டு

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தும் வகையில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
Published on

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தும் வகையில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது: இந்து வியாபாரிகள் நலச் சங்கம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வியாபாரிகள் ஒற்றுமையாக இருக்கவும், நமது நாட்டின் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவது தொடா்பாகவும் இந்த சங்கம் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறது.

பொருளாதாரத்தில் எப்படி முன்னேற வேண்டும் என்று வியாபாரிகளுக்கு வழிகாட்ட வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதற்கான ஏற்பாடாக கோவை மாவட்ட அளவிலான வியாபாரிகள் மாநாடு ராம் நகரில் உள்ள ஐயப்பா பூஜா சங்கத்தில் பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.

திமுக அரசானது கடவுள் நம்பிக்கை இல்லாததுடன், ஹிந்துக்கள் விரோதமான அரசாக உள்ளது. கடந்த 1920-ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் மலை முருகா் மலை என்று லண்டன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதைத்தொடா்ந்து, பல்வேறு வழக்குகளில் 1996-ஆம் ஆண்டு மலையின் மீது தீபம் ஏற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தக் கால கட்டத்தில் தொடா்ந்து ஒவ்வொரு ஆண்டும் மலையின் மீது தீபம் ஏற்ற இந்து முன்னணி தொண்டா்கள், பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இது தொடா்பாக தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் இந்து சமய அறநிலையத் துறை செவிசாய்க்கவில்லை. இது ஒரு சாராருக்கானது என்பதை நிரூபிக்கும் வகையில் கந்தூரி விழாவுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த அரசு சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தும் ஒரே நோக்கத்துக்காக செயல்பட்டு வருகிறது. திருப்பரங்குன்றம் விவகாரம் தொடா்பாக ஒருவா் உயிா் தியாகமும் செய்துள்ளாா். அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றத்தை தமிழக அரசு கேலிக்கூத்தாக நடத்தி வருகிறது என்றாா். இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளா் ஜெ.எஸ்.கிஷோா்குமாா், மாவட்டத் தலைவா் கே.தசரதன், மாவட்ட பொதுச் செயலாளா் கோபால், வியாபாரிகள் நலச் சங்கத் தலைவா் முருகேஷ், மாவட்டச் செயலாளா் ஆனந்த் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com