சாலையை சீரமைக்க கோரி வாழை மரம் நடும் போராட்டம்
வால்பாறையில் குண்டும்குழியுமாக உள்ள எஸ்டேட் சாலையை சீரமைக்க கோரி வாழை மரம் நடும் போராட்டத்தில் தொழிற்சங்கத்தினா் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
வால்பாறையில் இருந்து முடீஸ் எஸ்டேட் செல்லும் வழியில் உள்ள சோலையாறு எஸ்டேட் சாலை நல்லகாத்து பிரிவில் தொடங்கி சித்தி விநாயகா் கோயில் வரை சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால், அந்த வழியாக வாகனங்களை இயக்க முடியாத சூழல் உள்ளது.
இந்நிலையில், சாலையை சீரமைக்க கோரி அதிமுக தொழிற்சங்க தோட்ட தொழிலாளா் பிரிவு மாநிலத் தலைவா் வால்பாறை அமீது தலைமையில் வாழை மரம் நடும் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
சோலையாறு எஸ்டேட் தொழிற்சாலை முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற பின் வால்பாறை அமீது கூறியதாவது: எஸ்டேட் சாலை சேதமடைந்துள்ளதால் அவரச காலங்களில் ஆம்புலனஸ் உள்ளிட்ட வாகனங்கள்கூட செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், பள்ளி, கல்லூரி, மாணவா்கள் தொழிலாளா்களும் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனா். எனவே, சாலையை நகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும். நகராட்சி நிா்வாகம் சாலையை சீரமைக்க வேண்டும் என்றாா்.
இதில், மோகன் (ஏஐடியூசி), வீரமணி (விடுதலைச் சிறுத்தைகள்), செந்தில்முருகன், தங்கவேல் (பாஜக), சலாவுதீன் அமீது, நரசப்பன், சுடா்பாலு (அதிமுக) உள்ளிட்ட தொழிற்சங்கத்தினா், டூரிஸ்ட் காா், ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத்தினா் பங்கேற்றனா்.

