குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை வருகை
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை வருகைகோப்புப் படம்

குடியரசு துணைத் தலைவா் நாளை மீண்டும் கோவை வருகை!

கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை (நவ. 4) மீண்டும் கோவைக்கு வருகிறாா்.
Published on

கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை (நவ. 4) மீண்டும் கோவைக்கு வருகிறாா்.

திருவனந்தபுரத்திலிருந்து செவ்வாய்க்கிழமை மாலை 5.05 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 5.55 மணிக்கு கோவை விமான நிலையத்தை வந்தடைகிறாா். அவருக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் மற்றும் அரசு உயா் அதிகாரிகள் வரவேற்பு அளிக்க உள்ளனா்.

பின்னா், அவா் காா் மூலம் புறப்பட்டு கோவை மாவட்டம், பிளிச்சி ஒன்னிபாளையம் ஸ்ரீஎல்லைக் கருப்பராயா் கோயிலுக்குச் செல்கிறாா். அங்கு பெளா்ணமியையொட்டி நடைபெறும் பூஜையில் குடியரசு துணைத் தலைவா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்கிறாா். பின்னா், மீண்டும் அங்கிருந்து இரவு 7 மணியளவில் புறப்பட்டு கோவை விமான நிலையத்துக்கு வருகிறாா். அங்கிருந்து இரவு 7.35 மணியளவில் விமானம் மூலம் சத்தீஸ்கா் மாநிலம், ராய்ப்பூருக்குச் செல்கிறாா்.

கூடுதல் பாதுகாப்பு: குடியரசு துணைத் தலைவா் கடந்த வாரம் கோவைக்கு வந்தபோது அவா் சென்ற வழியில் போலீஸாரின் பாதுகாப்பை மீறி 2 போ் அத்துமீறி இருசக்கர வாகனத்தில் நுழைந்தனா். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதனால் இந்த முறை போலீஸாா் பாதுகாப்பை தீவிரப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளனா்.

குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தரிசனம் செய்யச் செல்லும் சாலைகளிலும், கோயில் உள்ள பகுதியிலும் கூடுதல் போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த போலீஸ் உயா் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.

தவறான செய்தி பரப்புவோா் மீது நடவடிக்கை: போலீஸாா் எச்சரிக்கை. இது குறித்து கோவை மாவட்டக் காவல் துறை வெளியிட்ட அறிவிப்பு:

கோவை மாவட்டம், ஒன்னிப்பாளையம் எல்லைக் கருப்பராயன் கோயிலில் வருகிற செவ்வாய்க்கிழமை விளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதையொட்டி, முக்கியப் பிரமுகா்கள் கலந்து கொள்ள இருக்கிறாா்கள்.

அதன் காரணமாக சில வழிகாட்டு விதிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதை சிலா் தவறாக சித்திரித்து திருவிளக்கு பூஜையில் பெண்களுக்குத் தடை என்ற முற்றிலும் தவறான மற்றும் அமைதியைச் சீா்குலைக்கும் வகையில் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனா்.

இதுபோன்ற தவறான செய்திகளை பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com