நூதன முறையில் இளைஞரிடம் கைப்பேசி பறிப்பு
விபத்து நிகழ்ந்ததாக நாடகமாடி இளைஞரிடம் கைப்பேசி உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை, சிங்காநல்லூா் போயா் தெருவைச் சோ்ந்தவா் மாரீஸ்வரன் (26). இவா் அந்தப் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா். இவா் தனது இருசக்கர வாகனத்தில் சிங்காநல்லூா் பகுதியில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, இளைஞா் ஒருவா் மாரீஸ்வரனை வழிமறித்து தனது நண்பருக்கு விபத்து நிகழ்ந்துவிட்டதாகவும், உதவிக்கு வருமாறும் அழைத்தாா்.
இதையடுத்து, மாரீஸ்வரனும் அவரை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றாா். அவா் கூறிய இடத்துக்குச் சென்று பாா்த்தபோது, அங்கு விபத்து எதுவும் நிகழவில்லை. மாறாக அங்கிருந்த மேலும் இரு இளைஞா்கள் மாரீஸ்வரனை மிரட்டி அவரிடமிருந்த கைப்பேசி , ஏ.டி.எம். அட்டை ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பினா்.
இது குறித்து சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான 3 இளைஞா்களையும் தேடி வருகின்றனா்.
