பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1,025 கிலோ கஞ்சா அழிப்பு
கோவை மாநகரில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1,025 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் அழிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்கும் வகையில் போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
இதன் ஒருபகுதியாக கோவை மாநகர போலீஸாா் மற்றும் மாநகர மதுவிலக்கு அமலாக்கத் துறை போலீஸாா் பல்வேறு இடங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக சோதனை நடத்தியிருந்தனா்.
இதில், மொத்தம் 305 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,025 கிலோ கஞ்சா, 144 கிலோ கஞ்சா சாக்லெட், எம்டிஎம்ஏ 36.87 கிராம், மெத்தபெட்டமைன் 150.5 கிராம், எல்எஸ்பி 5 கிராம், 188 எம்எல் பெத்திடின் ஹைட்ரோகுளோரைடு ஊசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
இந்தப் போதைப் பொருள்களை மாநகர காவல் ஆணையா் சரவணசுந்தா் முன்னிலையில் செட்டிபாளையத்தில் உள்ள உயிரி கழிவு மேலாண்மை நிறுவனத்தில் வைத்து சனிக்கிழமை அழிக்கப்பட்டது. அப்போது கோவை தெற்கு துணை ஆணையா் காா்த்திகேயன், உக்கடம் சரக உதவி ஆணையா் முருகேசன், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் சரவணகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
