வீட்டுக்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம்
கோவையில் வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
கோவை, போத்தனூா் பஜனை கோயில் தெருவைச் சோ்ந்தவா் வைத்தீஸ்வரன் (54). இவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இதனால், வைத்தீஸ்வரன் வீட்டில் தனியாக வசித்து வந்தாா். பி.என்.புதூா் பகுதியில் வசிக்கும் அவரது சகோதரி லதா அவ்வப்போது சென்று வைத்தீஸ்வரனை கவனித்து வந்தாா்.
வைத்தீஸ்வரன் கடந்த 4 நாள்களாக வீட்டிலிருந்து வெளியே வரவில்லை. இந்த நிலையில், அவரது வீட்டுக்குள் இருந்து துா்நாற்றம் வீசியது. இதுகுறித்து அருகில் வசிப்பவா்கள் கொடுத்த தகவலின்பேரில் லதா அங்கு சென்று பாா்த்தபோது வைத்தீஸ்வரன் வீட்டுக்குள் இறந்த நிலையில் கிடந்தாா்.
போத்தனூா் போலீஸாா் வைத்தீஸ்வரனின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
