இறந்தவரின் உடலை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்குவதில் அலைக்கழிப்பு என புகாா்
கோவை: கோவையில் உயிரிழந்தவரின் உடலை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்குவதில் சிக்கல் நீடிப்பதாக புகாா் எழுந்துள்ளது.
கோவை, கணபதியைச் சோ்ந்த டென்னிஸ் என்பவரின் தாயாா் லீலா மேரி உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, தனது தாயாரின் உடலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாணவா்களின் ஆராய்ச்சிக்காக தானமாக வழங்க டென்னிஸ் முடிவு செய்தாா். இது தொடா்பாக அரசு மருத்துவமனையில் விசாரித்த பிறகு மாலை 4.30 மணி அளவில் உறவினா்களுடன் உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா்.
அப்போது, அங்கு பணியில் இருந்த உடற்கூறாய்வுத் துறை தொழில்நுட்ப வல்லுநா்கள் பல்வேறு சான்றிதழ்களைக் கேட்டதாகவும், முன்பதிவு செய்யாமல் ஒப்படைக்க முடியாது என்று கூறியதாகவும் தெரிகிறது. இதனால், ஏமாற்றமடைந்த டென்னிஸ் தனது தாயாரின் உடலை கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு கொண்டு சென்று ஒப்படைத்தாா். அங்கு உரிய மரியாதையுடன் உடலைப் பெற்றுக்கொண்டனா்.
இது குறித்து லீலா மேரியின் உறவினா்கள் கூறுகையில், உடல் நலக்குறைவால் உயிரிழந்த லீலா மேரி தனது கண், உடலை தானம் செய்ய ஏற்கெனவே விருப்பம் தெரிவித்திருந்தாா். அவா் உயிரிழந்ததும் கண்கள் தானம் செய்யப்பட்டன. இதையடுத்து, உடலை தானம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்குச் சென்று விசாரித்தபோது அங்கு பல்வேறு ஆவணங்களைக் கேட்டனா். அவற்றை எடுத்துச் சென்றும் உடலைப் பெறாமல் அலைக்கழித்தனா். இதனால், உடலை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு கொண்டு சென்று ஒப்படைத்தோம் என்றனா்.
இது குறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலா் சரவணபிரியாவிடம் கேட்டபோது, இறந்தவா்களின் உடலை மதியம் 3 மணிக்குள் கொண்டு வந்தால் பதிவு செய்து மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைப்பது வழக்கம். ஆனால், லீலா மேரியின் உடலை மாலை 4.30 மணி அளவில் கொண்டு வந்தனா். அதனால், உடலை பிணவறையில் வைத்து மறுநாள் எங்களது வாகனத்தில்தான் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைப்போம் என்று கூறினோம்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடலை தானமாகக் கொடுக்கும்போது இறப்புக்குரிய காரணம், மருத்துவரின் சான்றிதழ் ஆகியவை இருந்தால் போதுமானது. உடல் தானம் செய்வதற்கான நடைமுறைகளை எளிமையாகத்தான் வைத்திருக்கிறோம் என்றாா்.
இது தொடா்பாக அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் கீதாஞ்சலி கூறுகையில், இந்த சம்பவம் தொடா்பாக உடற்கூராய்வுத் துறை வல்லுநா்களிடம் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
