பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு மனநல ஆலோசனை தேவை: மாநில மகளிா் ஆணையத் தலைவி
கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு மனநல ஆலோசனை தேவை என்று மாநில மகளிா் ஆணையத் தலைவி ஏ.எஸ்.குமாரி கூறினாா்.
கோவையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கல்லூரி மாணவியை செவ்வாய்க்கிழமை மாலை பாா்த்து ஆறுதல் கூறிய பின்னா், மாநில மகளிா் ஆணையத் தலைவி ஏ.எஸ்.குமாரி செய்தியாளா்களிடம் கூறியதாவது: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவியை சந்தித்து அவரின் நிலை மற்றும் தேவைகளைக் கேட்டறிந்தேன். மாணவிக்கு மருத்துவ சிகிச்சை, மனநல ஆலோசனை தேவை. சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு கவுன்சலிங் தரப்பட வேண்டும். மாணவிக்கு இழைக்கப்பட்டது ஒரு கொடூரமான செயல். இந்த சம்பவத்தில் ஆயுதங்களால் தாக்கப்பட்ட இளைஞரையும் சந்திக்கவுள்ளேன். பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு காவல் துறையினா் கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும். இந்தச் சம்பவத்தில் ஒரு மாதத்தில் காவல் துறையினா் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
இதுபோன்ற வழக்குகளில் தண்டனை உடனடியாக வழங்கப்படுகிறது. சம்பவம் நடைபெற்ற இடத்திலும் ஆய்வு செய்ய உள்ளேன். முந்தைய காலங்களில் மகளிா் ஆணையத்துக்கு புகாா்கள் வராது. பெண்கள் பயப்படுவா். தற்போது விழிப்புணா்வு இருப்பதாலும், தீா்வு கிடைக்கும் என்பதாலும் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியத்துடன் புகாா் தெரிவிக்கின்றனா். இதன்மூலம், மகளிா் ஆணையத்துக்கு வரும் புகாா்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
பாலியல் வழக்குகளில் தண்டனையை கடுமையாக்க வேண்டும். அப்போதுதான் குற்றங்கள் குறையும். மாணவி பாலியல் சம்பவத்தில் போலீஸாா் திறம்பட செயல்பட்டுள்ளனா். நடிகா் மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கில் டிஜிபிக்கு டைரக்ஷன் பாஸ் பண்ணியுள்ளேன் என்றாா்.

