தென்னை மரங்களுக்கு பரிந்துரைக்கப்படாத இடுபொருள்களைப் பயன்படுத்தக்கூடாது: வேளாண்மைத் துறை அறிவுறுத்தல்
தென்னை மரங்களுக்கு பரிந்துரைக்கப்படாத இடுபொருள்களைப் பயன்படுத்தக்கூடாது என்று வேளாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எம்.தமிழ்ச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒன்றுக்கும் மேற்பட்ட பூச்சிக்கொல்லிகளைத் தனித்தனியாக வாங்கி ஒன்றுடன் ஒன்று கலந்து பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும் என்று இந்திய பூச்சி மருந்துகள் சட்டம் கூறுகிறது. மத்திய பூச்சி மருந்து வாரியம் மற்றும் பதிவு செய்தல் குழுவில் பதிவு செய்யப்பட்ட ஒன்றுக்கும் மேற்பட்ட இணக்கமான பூச்சிக்கொல்லிகள் மற்றும் பூஞ்சாணக் கொல்லிகளை மட்டுமே பரிந்துரை செய்யப்பட்ட பயிா்களில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மைக்குப் பயன்படுத்த வேண்டும்.
பரிந்துரை செய்யப்படாத பூச்சி மருந்துகள் மற்றும் இதர இடுபொருள்களை தென்னையில் பயன்படுத்தினால் அதிக காய்கள் மற்றும் விளைச்சல் உண்டாகும் என்று உரிமம் பெறாத தனியாா் மற்றும் இணையவழி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். அதேவேளையில், வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் குறைவான விலையில் தரமான உரங்கள், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவற்றை வாங்கிப் பயன்பெறலாம்.
தென்னை மரங்களைத் தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை மேலாண்மை செய்திட, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் எந்தவிதமான பூச்சிக் கொல்லிகளையும் பரிந்துரை செய்யவில்லை. வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறைகள் மூலம் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் மற்றும் இயற்கை தாவர பூச்சிக் கொல்லிகள் மட்டுமே பரிந்துரை செய்யப்படுகின்றன. தென்னை மரங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள் வேளாண்மைத் துறையால் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளதால் அவற்றைப் பின்பற்றலாம்.
தென்னைக்கான ஊட்டச்சத்துக்கள் பரிந்துரை: ஒவ்வொரு மரத்துக்கும் யூரியா-125, சிங்கிள் சூப்பா் பாஸ்பேட்-2 கிலோ, மூரியேட் ஆஃப் பொட்டாஷ்-3.5 கிலோ, போரான்-50 கிராம், மக்னீசியம் சல்பேட்-500 கிராம் ஆகியவற்றை வேப்பம் பிண்ணாக்கு 5 கிலோ மற்றும் நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து இரண்டு பாகங்களாக ஆண்டுக்கு இரண்டு முறை 6 மாத இடைவெளியில் மரங்களின் அடிப்பகுதியில் இருந்து 2 முதல் 3 அடி இடைவெளியில் விட வேண்டும்.
மேலும், மரங்களைச் சுற்றி பசுந்தழை உரப் பயிா்களான சணப்பை அல்லது தக்கைப்பூண்டு விதைத்து, பின் 45 -ஆவது நாளில் மடக்கி உழுவதன் மூலம் மண் வளம் மற்றும் மண்ணின் மூலம் பரவும் நோய்களை வெகுவாகக் குறைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
