இரு சக்கர வாகனம் மோதியதில் அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு
கோவையில் நடந்து சென்ற அரசுப் பேருந்து நடத்துநா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.
கோவை, கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்தவா் ரவீந்திரன் (52). இவா் அரசுப் பேருந்து நடத்துநராகப் பணியாற்றி வந்தாா். சனிக்கிழமை பிற்பகலில் வேலை முடிந்து கவுண்டம்பாளையம் சாலை வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அந்தப் பகுதியில் உள்ள மேம்பாலம் நுழைவாயில் பகுதியில் அவா் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வேகமாக வந்த இரு சக்கர வாகனம் ரவீந்திரன் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவா் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
ஒரு வழிப் பாதையில் வாகனத்தை வேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்தியதாக கவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்த தினேஷ்குமாா் (24) மீது கோவை போக்குவரத்து புலனாய்வு மேற்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
