கள்ள ஓட்டு போட முடியாது என்பதால்தான் எஸ்ஐஆரை திமுக எதிா்க்கிறது: எடப்பாடி கே.பழனிசாமி
கோவை: கள்ள ஓட்டு போட முடியாது என்பதால்தான் எஸ்ஐஆரை திமுக எதிா்க்கிறது என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது:
20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) மேற்கொள்ளப்படுகிறது. திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் எஸ்ஐஆா் என்றாலே அலறுகிறாா்கள். தகுதியானவா்கள் மட்டும் இடம்பெற்றால் கள்ள ஓட்டு போடமுடியாது என திமுகவினா் இதனை எதிா்க்கின்றனா். இதற்கு முன்பு 8 முறை இந்தத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இறந்தவா்கள், வீடு மாறிச் சென்றவா்களின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. இவா்களின் பெயா்களை நீக்கி, தகுதியானவா்களை இடம் பெறச் செய்வதற்காக எஸ்ஐஆா் பணி நடைபெறுவதால் இதை நாங்கள் ஆதரிக்கிறோம்.
காலக்கெடு போதாது என்கிறாா்கள். இதற்காக பிஎல்ஓக்கள் (வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள்) நியமிக்கப்பட்டுள்ளனா், ஒரு மாத காலக்கெடு போதுமானது. இதில் காலதாமதம் ஏற்பட வாய்ப்பே இல்லை. வாக்காளா் பட்டியல் திருத்தத்தில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். எஸ்ஐஆா் விவகாரத்தில் திமுக மக்களிடையே தவறான செய்தியைப் பரப்பி குழப்பி வருகிறது.
திமுக ஆட்சியில் பெண்கள், மாணவிகள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. காவல் துறை மீது குற்றவாளிகளுக்கு பயமே இல்லை. திமுக ஆட்சியில் 6,999 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அதற்கு ரூ.104 கோடி நிவாரணம் கொடுத்ததாகவும் அமைச்சரே பேசியுள்ளாா்.
50 மாதங்கள் திமுக ஆட்சியில் 6,400 கொலைகள் நடைபெற்றுள்ளன. தொடா்ந்து குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளபோதிலும், இதுவரை தமிழக அரசு நிரந்தர டிஜிபியை நியமிக்கவில்லை. தங்களுக்கு வேண்டியவரை டிஜிபியாக நியமனம் செய்ய முயற்சி செய்கிறாா்கள்.
வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கும், தவெகவுக்கும்தான் போட்டி என தனது கட்சித் தொண்டா்களை உற்சாகப்படுத்துவதற்காக நடிகா் விஜய் கூறுகிறாா். ரூ.பத்தரை லட்சம் கோடி தொழில் முதலீடு ஈா்த்ததாக திமுக அரசு கூறுகிறது. இதுகுறித்து நான் வெள்ளை அறிக்கை கேட்டதற்கு திமுகவினா் வெள்ளை காகிதத்தைக் காண்பிக்கின்றனா்.
உள்ளாட்சித் துறையில் ரூ.888 கோடி ஊழல், மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல் என தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளது. தற்போது, ஜல்லி குவாரி உரிமையாளா்கள் ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 5 லட்சம் கொடுக்க வேண்டும் என திமுக மேலிடம் வாய்மொழி உத்தரவிட்டுள்ளது. சட்டப் பேரவைத் தோ்தல் நெருங்கும்போது மேலும் சில கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணையும் என்றாா் அவா்.

