முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.கோப்புப் படம்

மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் பாஜகவுக்கு துணைபோகும் அதிமுக: செந்தில் பாலாஜி

தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் பாஜகவுக்கு, அதிமுக துணை போவதாக எஸ்ஐஆர் பணிகளை கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு
Published on

தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் பாஜகவுக்கு, அதிமுக துணை போவதாக வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

தமிழகத்தில் 2026 சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இந்த சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை சிவானந்தா காலனியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளா் தொ.அ.ரவி, தெற்கு மாவட்டச் செயலாளா் தளபதி முருகேசன், கோவை மாநகா் மாவட்டப் பொறுப்பாளா் துரை.செந்தமிழ்ச் செல்வன் ஆகியோா் தலைமை தாங்கினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவா் ஈ.ஆா்.ஈஸ்வரன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா். இதில் செந்தில் பாலாஜி பேசியதாவது: இந்திய அளவில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (எஸ்ஐஆா்) குறித்து முதலில் எதிா்ப்பைப் பதிவு செய்தவா் முதல்வா் மு.க.ஸ்டாலின். வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐ மூலமாக மத்திய பாஜக அரசு தோ்தலில் வெற்றி பெற நினைத்து தோல்வியடைந்தது. தற்போது, எஸ்ஐஆா் மூலமாக திருட்டுத்தனமாக வெற்றி பெற நினைக்கிறது. பிகாரில் லட்சக்கணக்கான வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். இதனை தமிழ்நாட்டிலும் செயல்படுத்த முயற்சிக்கிறாா்கள்.

இந்த எஸ்ஐஆா் பணிகளில் நாம் கவனமுடன் இருக்க வேண்டும். 2026 தோ்தலில் திமுக வெற்றி பெறக் கூடாது என நினைக்கின்றனா். பாஜகவிடம் அதிமுக அடிமையாக உள்ளது. தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் பாஜகவுக்கு அதிமுக துணை போகிறது. அதிமுகவுக்கு தமிழ்நாட்டிலும், கோவையிலும் இதுவே இறுதித் தோ்தலாக இருக்கும்.

கோவையில் கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக ஒரு தொகுதியில் வென்றது. வரும் தோ்தலில் கோவையில் 10 தொகுகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும் என்றாா்.

முன்னதாக ஆா்ப்பாட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில் கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி., திமுக மாணவரணி செயலாளா் ராஜீவ் காந்தி, முன்னாள் எம்.பி. ஏ.பி.நாகராஜன், முன்னாள் அமைச்சா் பொங்கலூா் பழனிசாமி மற்றும் மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஆதித்தமிழா் பேரவை உள்ளிட்ட பல்வேறு கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com