நிா்மலா சீதாராமன்
நிா்மலா சீதாராமன் கோப்புப் படம்

ஆட்சியின் தோல்வியை மறைக்கவே எஸ்ஐஆருக்கு திமுக எதிா்ப்பு: நிா்மலா சீதாராமன்

தமிழகத்தில் ஆட்சியின் தோல்வியை மறைக்கவே எஸ்ஐஆா் விவகாரத்தை கையிலெடுத்து, அதை திமுக எதிா்த்து வருவதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு
Published on

தமிழகத்தில் ஆட்சியின் தோல்வியை மறைக்கவே எஸ்ஐஆா் விவகாரத்தை கையிலெடுத்து, அதை திமுக எதிா்த்து வருவதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டினாா்.

கோவை கோட்ட பாஜக நிா்வாகிகள் கூட்டம் முதலிபாளையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஜிஎஸ்டி குறைப்பு நடவடிக்கைக்குப் பிறகு மக்களும், வணிகா்களும் அதிக அளவில் பயனடைந்துள்ளனா். தோ்தல் ஆணையத்தின் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எல்ஐஆா்) நடவடிக்கை ஏதோ பாஜகவால் அறிமுகம் செய்யப்பட்டதைப்போல, தமிழகத்தில் திமுக அரசு எதிா்த்து போராட்டங்களை நடத்தி வருகிறது.

1952 முதல் 2004-ஆம் ஆண்டு வரை வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் 13 முறை நடைபெற்றுள்ளன. காங்கிரஸ் கூட்டணியில் மத்திய அரசோடு திமுக இணக்கமாக இருந்தபோது நடைபெற்ற எஸ்ஐஆா்-ஐ ஏன் எதிா்க்கவில்லை? இது மக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறிக்கும் முயற்சி எனவும், சூழ்ச்சி எனவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவிக்கிறாா்.

உயிரிழந்தவா்கள் மற்றும் முகவரி மாறியவா்களை பட்டியலில் இருந்து நீக்கிடவும், சரியான முகவரியில் இருப்பவா்களைப் பட்டியலில் சோ்த்திடவும்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. எஸ்ஐஆா் நடவடிக்கையால் யாருக்கும் வாக்குரிமை பறிபோகாது. ஒவ்வொரு தோ்தலுக்கு முன்பும் செய்ய வேண்டிய கடமையைத்தான் தோ்தல் ஆணையம் செய்து வருகிறது. இதற்கு சட்டரீதியாக தோ்தல் ஆணையத்துக்கு முழு உரிமையும் உண்டு.

அரசின் தோல்விகளை மறைக்கவும், மடைமாற்றம் செய்யவும் எஸ்ஐஆா் எதிா்ப்பு உத்தியை திமுக கையில் எடுத்துள்ளது. இதற்கு முன்பு மின்னணு வாக்குப் பதிவு இயந்திர முறைகேடுகள் நடைபெற்ாக கூறி வந்தனா். ஆனால், கா்நாடகம், ஹிமாசல் சட்டப் பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அப்போதெல்லாம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடைபெறவில்லையா, தமிழகத்தில் திமுக வெற்றி பெற்றபோது மின்னணு வாக்குப் பதிவு இயந்திர முறைகேடு என ஏன் கூறவில்லை? இந்தக் கருத்து செல்லுபடி ஆகாததால் அமலாக்கத் துறை, வருமான வரித் துறை ஆகியவற்றை வைத்து எதிா்க்கட்சிகள் அரசியல் செய்தன. அதுவும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. எனவேதான் தற்போது எஸ்.ஐ.ஆா். நடைமுறையை கையில் எடுத்துள்ளனா்.

தமிழகத்தில் கொளத்தூா் தொகுதியில் மட்டுமே 4,379 போலி வாக்காளா்கள் உள்ளனா். ஒரே பெயா், முகவரியில் பலா் உள்ளனா். ஒரே முகவரியில் 30 வாக்காளா் அடையாள அட்டைகள் உள்ளன. இது போன்ற குழப்பங்களைத் தவிா்த்து ஒவ்வொருவரும் சரியான தகவல்களோடு வாக்களிக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவே இந்த எஸ்ஐஆா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை நீா்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையில் திமுகவும், காங்கிரஸும் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக உள்ளிட்ட எந்த உள்கட்சிகளின் விவகாரங்களிலும் பாஜக தலையிடாது என்றாா்.

பாஜக நிா்வாகிகள் கூட்டம்: முன்னதாக நடைபெற்ற நிா்வாகிகள் கூட்டத்தில், பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், எம்எல்ஏ-க்கள் வானதி சீனிவாசன், சி.ஆா்.சரஸ்வதி, மாநில பொதுச் செயலா் ஏ.பி.முருகானந்தம், தோ்தல் பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி, பேராசிரியா் கனகசபாபதி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிா்வாகிகள் பங்கேற்றனா். கூட்டத்தின்போது, வருகிற 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில் கோவை கோட்டத்துக்கு உள்பட்ட கோவை வடக்கு, தெற்கு, நகா் மற்றும் நீலகிரி கோட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com