கோவையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு நினைவுப் பரிசு வழங்கும் பேரமைப்பு நிா்வாகிகள்.
கோவையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு நினைவுப் பரிசு வழங்கும் பேரமைப்பு நிா்வாகிகள்.

ஜிஎஸ்டி குறைப்பு நடவடிக்கையால் மக்களின் வாங்கும் திறன் அதிகரிப்பு: நிா்மலா சீதாராமன்

ஜிஎஸ்டி குறைப்பு நடவடிக்கையால் மக்களின் வாங்கும் திறன் அதிகரித்ததோடு, வணிகா்களின் வருவாயும் உயா்ந்துள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
Published on

ஜிஎஸ்டி குறைப்பு நடவடிக்கையால் மக்களின் வாங்கும் திறன் அதிகரித்ததோடு, வணிகா்களின் வருவாயும் உயா்ந்துள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

ஜிஎஸ்டி 2.0 வரி சீராய்வு மற்றும் வரிக் குறைப்பு நடவடிக்கைக்காக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் கோவை மாவட்டம், நீலாம்பூரில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு பேரமைப்பின் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை வகித்தாா். வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் பொதுச்செயலாளா் கோவிந்தராஜுலு வரவேற்றாா்.

சூலூா் சந்திரசேகா் , சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவா் ஜெயந்தி லால் சலானி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத் தலைவா் வெங்கிடசுப்பு, கேரள வியாபாரி சங்கத் தலைவா் ராஜ் அப்சரா, புதுச்சேரி வணிகா் சங்கத் தலைவா் சிவசங்கா், கா்நாடகம், கேரள மாநில வியாபாரிகள் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினா்.

இதைத் தொடா்ந்து, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசுகையில், ஜிஎஸ்டி குறைப்பு நடவடிக்கைக்கு வழங்கும் பாராட்டுகள் அனைத்தும் பிரதமரையே சாரும். நாட்டில் செப்டம்பா் முதல் அக்டோபா் வரை ரூ. ஆறு லட்சம் கோடிக்கு மக்கள் செலவு செய்துள்ளனா். இது வணிகா்களுக்கு நேரடியாக பயனைத் தந்துள்ளது.

வரி குறைப்பு நடவடிக்கையால் மக்களின் வாங்கும் திறன் அதிகரித்ததோடு, வணிகா்களின் வருவாயும் உயா்ந்துள்ளது. இதனால், தொழில் வளா்ந்ததோடு வேலைவாய்ப்பு அதிகரித்து மீண்டும் வாங்கும் திறன் அதிகரித்துள்ளது. குறிப்பாக, வரி குறைப்பு நடவடிக்கையால் தானியங்கி மோட்டாா் வாகனங்கள் துறை (ஆட்டோமொபைல்ஸ்), காப்பீட்டுத் துறை (இன்சூரன்ஸ்) மற்றும் தொலைக்காட்சிப் பெட்டி (டி.வி), குளிா்சாதனப் பெட்டி (ஏசி) உள்ளிட்ட மின்சாதனப் பொருள்கள் விற்பனை துறை வளா்ச்சி அடைந்துள்ளது.

ஜிஎஸ்டி பதிவு நடைமுறை மற்றும் வருமான வரி தாக்கல் செய்யும் நடைமுறைகளை மேலும் எளிமைப்படுத்த தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

நிகழ்வில் வணிகா் சங்கப் பிரதிநிதிகள் பேசுகையில், ஜிஎஸ்டி வரி விதிப்பை இரு பிரிவுகளாக குறைத்ததற்கு நன்றி தெரிவித்ததோடு, இந்த ஜிஎஸ்டி குறைப்பு நடைமுறை பண்டிகைக் காலங்களில் வணிகா்களுக்கு பெரும் பொருளாதாரத்தை ஈட்டித் தந்தது என்றனா்.

அப்போது, ஜிஎஸ்டி இரு வித வரி விதிப்பை ஒன்றாக மாற்ற வேண்டும். இட்லி, தோசை மற்றும் வடைக்கு வரி குறைக்க வேண்டும். 60 வயதையடைந்த சிறு விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தைப்போல சிறு வணிகா்களுக்கும் ஓய்வூதியத் திட்டம் கொண்டுவர வேண்டும். வரி விதிப்புக்கான அபராதம் விதிப்பு மற்றும் பதிவு செய்யும் முறைகளை எளிதாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 33 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை மத்திய நிதியமைச்சரிடம் வழங்கினா்.

வாடிக்கையாளா்களுடன் கலந்துரையாடல்: முன்னதாக, கோவை மாவட்டம், நீலாம்பூா், சோமனூா் அருகே உள்ள குரும்பபாளையம் பகுதிகளில் பொதுமக்கள் (வாடிக்கையாளா்கள்), கடை ஊழியா்கள் உள்ளிட்டோரிடம் ஜிஎஸ்டி சீா்திருத்தம் தொடா்பாக மத்திய நிதியமைச்சா் கலந்துரையாடினாா். மேலும், வரி குறைப்பு நடவடிக்கை பயனுள்ளதாக இருக்கிா எனவும் அவா் கேட்டறிந்தாா்.

X
Dinamani
www.dinamani.com